வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (07/10/2018)

கடைசி தொடர்பு:18:47 (07/10/2018)

ஆர்கானிக் உணவுகள் இனி அவ்வளவுதானா? - விவசாயிகளை அச்சுறுத்தும் புதிய லைசென்ஸ் முறை

ஆர்கானிக் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடுகள், விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஆர்கானிக் உணவுகள் இனி அவ்வளவுதானா? - விவசாயிகளை அச்சுறுத்தும் புதிய லைசென்ஸ் முறை

"இது ஆர்கானிக் அரிசி சார்... இது உரம் போடாமல் விளைஞ்ச கத்திரிக்காய் மேடம்... இதை சாப்பிட்டு பாருங்க, இயற்கையில விளைஞ்ச வாழைப்பழம்" - இதுபோன்ற சொல்லாடல்கள் தற்பொழுது அதிகமாக உலா வந்து கொண்டிருக்கிறன. சமீபகாலமாக இவற்றிற்கு மக்களிடம் மவுசு அதிகமாகியுள்ளது. காரணம், ஆர்கானிக் உணவுப்பொருள்கள் மீதான விழிப்புஉணர்வும் மோகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதுதான். இதற்கான சந்தை வாய்ப்புகள் மிகவும் வேகமாக விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இதனை நமது ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமலே இருந்தார்கள். இந்நிலையில்தான் திடீர் ஞானதோயம் ஏற்பட்டு தற்பொழுது மத்திய அரசு ஆர்கானிக் உணவுப் பொருள்கள் மீது புதிதாக பார்வையை வீசி, தீவிரமாக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. அதன்படி இனிமேல் மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து அங்கக ஆர்கானிக் சர்டிபிகேட் பெற்றுள்ளவர்கள் மட்டுமே இந்தியாவில் இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பனை செய்ய முடியும். இப்படியொரு புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சான்றிதழ் இல்லாமல் ஆர்கானிக் உணவுப்பொருள்களை யாரேனும் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இதுதவிர இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினர் வழங்கக்கூடிய அங்கக சான்றிதழ் இனி செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் இயற்கை விவசாயிகளுக்கும் நன்மை நிகழுமா ? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவரும் இயற்கை விவசாயிகளைப் பாதிக்குமா?

பல்வேறு தரப்பினரிடம் இதுகுறித்து விரிவாக விவாதித்தோம். முன்னோடி இயற்கை விவசாயி திருநாவுக்கரசு ‘’புதிய விதிமுறையால் பொது மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படாது. இதனைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகள்தான் பெரிய அளவில் பணம் பார்ப்பார்கள். குறுக்கு வழியில் அதிகமாக லாபம் சம்பாதிக்க விரும்புபவர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மிகவும் எளிதாக ஆர்கானிக் சர்டிபிகேட்டை வாங்கிவிடுவார்கள். ரசாயனத்தில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள்கள், ஆர்கானிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும். இது போன்ற மோசடி பேர்வழிகள், ஆர்கானிக் சர்டிபிகேட் வைத்திருப்பதால், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க முடியாது. விவசாயி திருநாவுக்கரசு அதுபோன்ற போலியான ஆர்கானிக் உணவுப்பொருள்களை மக்களும் நம்பி வாங்குவார்கள். இந்த சட்டத்தால் இயற்கை விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உண்மையான இயற்கை விவசாயிகள், அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து சர்டிபிகேட் வாங்குவதை விரும்பமாட்டார்கள்.

எங்களைப் போன்ற விவசாயிகளை, அதிகாரிகள் வேண்டுமென்றே அலைக்கழித்து மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள். ஆர்கானிக் சர்டிபிகேட் இல்லாமல் நாங்கள் விற்பனை செய்யவும் முடியாது. நம்பகத்தன்மை என்பது, இயற்கை விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையேயான பரஸ்பர உறவு. எங்களது சுற்றுவட்டார கிராம மக்கள், நண்பர்கள், உறவினர்கள் என்மீது நம்பிக்கை வைத்தும், எனது விவசாய முறைகளை நேரில் பார்த்தும் என்னிடம் பல ஆண்டுகளாக ஆர்கானிக் அரிசி வாங்கி சாப்பிடுகிறார்கள். உண்மையான இயற்கை விவசாயிகளை மக்கள் எளிதாக கண்டுபிடித்துவார்கள். இதில் அரசு தலையிட வேண்டியதில்லை. ஆர்கானிக் ஷாப் வைத்திருக்கும் வியாபாரிகள், ஏதேனும் முறைகேடுகள் செய்யக்கூடும் என சந்நேகம் ஏற்படலாம். இதற்கு ஒரே தீர்வு, இந்தியா முழுவதும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிமருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பதுதான்.” என்றார்.

தேனாம்படுகை பாஸ்கரன்

இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தேனாம்படுகை பாஸ்கரன் ‘’இயற்கை விவசாய விளைபொருள்களுக்கு தற்பொழுது உருவாகியுள்ள சந்தை வாய்ப்புகளை முழுமையாக அபகரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன. இதற்கு மத்திய அரசு நேரடியாகவே துணை போக துணிந்துவிட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.. ஆர்கானிக் எனப் பொய் சொல்லி விற்கப்படும் பொருள்களைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு விதிமுறையை உருவாக்குவது நல்லதுதானே என்ற எண்ணம் பரவலாக எல்லோருக்கும் தோன்றும். ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையான இயற்கை விவசாயிகளைத்தான் பெரிதும் பாதிக்கும். ரசாயன நஞ்சு இல்லாத உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கமுடையவர்கள்தான் பெரும்பாலும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் கண்காணிப்புகளின் அடிப்படையில் இதற்கான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

உண்மையான இயற்கை விவசாய பொருள்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் உள்ள 14 தொண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து இந்திய இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பை உருவாக்கி, அதன்மூலமாக இயற்கை விவசாய குழுக்களுக்கு இயற்கை வேளாண் சான்று வழங்கி வருகிறார்கள். இந்த சான்றை வழங்க, பங்கேற்பாளர் உத்தரவாத முறை கடைப்பிடிக்கப்படுகிறது. [ PGS- particpatory Guarantee systems] ஒரு குழுவில் இடம்பெற்றுள்ள இயற்கை விவசாயிகளின் நிலத்திற்கு மற்றொரு குழுவினர் நேரில் சென்று, 65 கேள்விகள் கேட்டு சரியான பதிலை அளித்தால்தான் அந்தக் குழுவுக்கு சான்று வழங்கப்படும். அந்த சான்றை பயன்படுத்தி அந்தக் குழுவில் உள்ள அனைவரும் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து கொள்வார்கள்.

இதனால் இதில் இடம்பெற்றுள்ள அனைவருமே விழிப்புடன் இருப்பார்கள். தவறு நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த சான்றுக்கு விவசாயிகள் எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. எந்த ஓர் ஆவணமும் தர வேண்டியதில்லை. இது மிகவும் எளிமையானதாக இருப்பதால் பெரும்பாலான இயற்கை விவசாயிகள் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பிடம் அங்கக சான்று வாங்குவதைத்தான் விரும்புகிறார்கள். மலைவாழ் மக்கள், மானாவாரி சிறு, குறு ஏழை விவசாயிகளைத் தேடி சென்று குழு அமைத்து, அவர்களது விளைபொருள்கள் இயற்கையாக விளைந்தது எனச் சான்று வழங்குவதோடு விற்பனைக்கும் இந்த அமைப்பு உதவி செய்கிறது. இதை ஒழித்துக்கட்டதான் மத்திய அரசு தற்பொழுது தீவிரம் காட்டுகிறது. இயற்கை விவசாயிகளை ஊக்கப்படுத்த மத்திய அரசு எந்த ஒரு உதவியும் செய்வதில்லை. நஞ்சில்லாத தரமான உணவை மக்களுக்குக் கொடுக்க வெண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது எந்த வகையில் நியாயம்? உணவு தர நிர்ணய சட்டப்படி, இயற்கை விளைபொருள்களுக்கு அங்கக சான்று அவசியம் என மத்திய அரசு சொல்கிறது. இதை அரசு நிறுவனம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம்தான் பெற வேண்டும் என்பது தற்போதைய சூழலில் ஏற்புடையதல்ல.

ஆர்கானிக் காய்கறிகள்

இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பிடம் அங்கக சான்று பெற்றுள்ள என்னைப் போன்ற ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். நாங்கள் அரசு நிறுவனத்திடம் புதிதாக விண்ணப்பித்து மீண்டும் அங்கக சான்று வாங்கியாக வேண்டும். புதிதாக இயற்கை விவசாயத்திற்கு வருபவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். மத்திய மாநில அரசுகளின் அங்கக சான்றளிப்பு துறை மற்றும் இதன் சார்பு நிறுவனங்களிடம் இருந்து விவசாயிகள் அங்கக சான்று வாங்குவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. அங்கக சான்றுக்கு விண்ணப்பம் செய்வதற்கே நீர் ஆய்வு சான்று, மண் ஆய்வு சான்று, நில அமைப்பு வரைபடம், விஏஒ சான்று எனஏராளமான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் இதற்கு பதிவுக்கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் செலுத்தியாக வேண்டும். இதற்குப் பதிவு செய்துள்ள விவசாயி ஆண்டு முழுவதும் பதிவேடு பராமரிக்க வேண்டும்.

கடும் பணி சுமையில் உள்ள விவசாயிகளுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை. அங்கக சான்றளிப்பு துறை அதிகாரிகள், இயற்கை விவசாயிகளின் நிலத்தை நேரில் ஆய்வு செய்து, முதல் கட்டமாக, அங்கக மாற்றத்திற்கான பருவ சான்று அளிப்பார்கள். லஞ்ச, ஊழல் மலிந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் இந்த அதிகாரிகளை விவசாயிகள் எதிர்கொள்வது அத்தனை எளிதான காரியமல்ல. இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த சான்று பெறுவதென்பது, குதிரைக் கொம்பாகிவிடும். இந்த சான்று வாங்கிவில்லையென்றால் இவர்களது விளைப்பொருள்களை விற்பனையாளர்கள் வாங்கமாட்டார்கள். உற்பத்தியாளர் நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு அங்கக சான்று தேவை இல்லை என அரசு சொல்கிறது. இயற்கை விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருள்கள் அனைத்தையும் நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று விற்பது மிகவும் சிரமம்.தங்களது விளைபொருள்களை விவசாயிகளே கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்து லேபிள் ஓட்டி விற்பனை செய்யவும் இந்த சட்டம் குறுக்கே நிற்கிறது. அங்கக சான்று இருந்தால் மட்டுமே விவசாயிகளால் விற்பனை செய்ய முடியும். அங்கக சான்றுகள் வாங்குவதென்பது பெரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை மிகவும் எளிதான காரியம்’’ என்றார்.

தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் உதவி இயக்குநர் பிரியதர்ஷனி ‘’இயற்கை விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அங்கக வேளாண் சான்றிதழ் கட்டாயம் தேவை என்ற நிலை இருந்து வந்தது. தற்பொழுது போலிகளைத் தடுக்க இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விளைபொருள்களுக்கும் இந்த சான்று அவசியம் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இயற்கை விவசாயம் செய்பவர்கள் 10 விதமான ஆவணங்களோடு 3,200 ரூபாய் கட்டணம் செலுத்தி எங்களிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும். நாங்கள் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி, சான்று வழங்குவோம். ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதற்கு 2,400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இயற்கை விவசாய குழுக்களுக்கு 7,200 ரூபாய் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உண்மையாக இயற்கை விவசாயம் செய்பவர்கள் மிகவும் எளிதாக எங்களிடம் அங்கக சான்று வாங்கலாம்.” எனத் தெரிவித்தார்.

காய்கறி கடை

இயற்கை விவசாயிகள் பட்டியலிடும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத்துறை இயக்குநர் மதியழகனிடம் கருத்து கேட்டோம் ‘’உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காகத்தான் மண் ஆய்வு, நீர் ஆய்வு உள்ளிட்ட சான்றுகளை கேட்கிறோம். இவை அனைத்தும் மிக எளிதாகப் பெறக்கூடியதுதான். நியாயமான பதிவுக்கட்டணம்தான் வாங்குகிறோம். அச்சிடப்பட்ட பதிவேடுதான் வழங்குகிறோம். இதனை விவசாயிகள் மிக எளிதாகப் பூர்த்தி செய்யலாம். உண்மையான இயற்கை விவசாயிகள் உயரிய நோக்கத்தோடு இதில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு முறையான அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இதில் தவறுகள் ஏதுவும் நிகழாமல் தடுப்பதற்காகவும் தான் திடமிட்ட மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்கிறோம். நாங்கள் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட விவசாயி, ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் எங்களிடம் அங்கக சான்று பெறமுடியாது.நேர்மையான முறையில் இயற்கை விவசாயம் செய்பவர்கள் எங்களிடம் அங்கக சான்று பெற்றுவிட்டால், தங்களது விளைபொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் துணையாக இருக்கும்.” என்கிறார். மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கட்டுப்பாடு, ஆர்கானிக் உணவுப்பொருள்களை வளர்த்தெடுக்குமா அல்லது வீழ்த்துமா என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்