வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:19:00 (07/10/2018)

'என்.எல்.சி குவித்து வைத்திருக்கும் மணலால் விவசாயம் பாதிக்கிறது' - கொதிக்கும் விவசாயிகள்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கெம்பாடிக்குப்பம், ஊ.கொளப்பாக்கம், அரசக்குழி, ஊ.அகரம் உள்ளிட்டப் பகுதிகளில்  என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு சுரங்கத்தில் இருந்து தோண்டப்படும் மண் அப்பகுதியில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி

கன மழை பெய்யும் போது மண் கரைந்து அருகில் உள்ள விளை நிலங்களில் படிந்து விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதன் பின்னர் விவசாயிகள் சரி செய்து விவசாயம் செய்வது வழக்கம். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு இழப்பீடு வழங்கியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு  ஆண்டும் வழங்குவதாகக் கூறியுள்ளது. ஆனால் அதன் பின்பு  ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போது  இப்படிப்  பாதிக்கப்படுகின்றனர். ஆனால், என்.எல்.சி நிர்வாகம் இழப்பீடு வழங்குவதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

நெய்வேலி

கிரகோரிஇந்நிலையில் கடந்த சில நாட்களாகக் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழைக் காரணமாக என்.எல்.சி சுரங்க மண், மழை நீரில் கலந்து அருகில் உள்ள வயல்களில் படிந்து அங்குப் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வயல் முழுவதும் மண் படிந்துள்ளது.

இதுகுறித்து அரசக்குழியைச் சேர்ந்த விவசாயி கிரகோரி கூறும்போது, 'வருடா, வருடம் என்.எல்.சி சுரங்க மண் படிந்து எங்கள் வயல்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் என்.எல்.சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனுக்கள் கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.

இதற்கு நிரந்தர தீர்வாக தடுப்பு சுவர் அமைக்க என்.எல்.சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும். கனமழைக் காணரமாக சுமார் 100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட பயிருக்கு உரிய நிவாரணமும், நிலத்தில் படிந்துள்ள மண் மேடுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை' என்று தெரிவித்தார்.