வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:09:18 (08/10/2018)

`அகழி வெட்டி காட்டு யானையைத் தடுக்கலாம்!' - விவசாயிகளிடம் உறுதியளித்த ஓ.பி.எஸ்!

தேனி மாவட்டத்தில் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் இருக்கும் பகுதிக்குச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் ஒற்றைக் காட்டு யானையால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கு இன்று நேரில் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்ட போது, ``இந்த ஒற்றைப் பெண் காட்டுயானையால் விவசாயம் பார்க்கவே மக்கள் அஞ்சுகிறார்கள். யானை பயத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் தோட்டத்துக்கு வருவதில்லை. ஒற்றைக் காட்டு யானையால் ஒரு உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது. அந்த யானையை உடனே பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விட வேண்டும்” என்றனர். அதைக் கேட்ட பின்னர், ``மலை அடிவாரத்தில் அகழி வெட்டப்படும். கண்காணிப்பு கோபுரம் அமைத்து யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். யானை பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படும்” என்றார் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.