வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (07/10/2018)

கடைசி தொடர்பு:20:01 (07/10/2018)

பைக் டேக்ஸி VS ஆட்டோ ஓட்டுநர்கள்... யார் மீது தவறு...?

பைக் டேக்ஸி VS ஆட்டோ ஓட்டுநர்கள்... யார் மீது தவறு...?

தினம் தினம் உயரும் பெட்ரோல், டீசல் விலை சாமான்ய மக்களை வதைத்து வருகிறது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, லாரி தொடங்கி பெட்ரோல், டீசலை நம்பியுள்ள மக்கள் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது மத்திய அரசு. அவசரத்திற்குக்கூட டேக்ஸியோ, ஆட்டோவோ பயன்படுத்த பட்ஜெட் அனுமதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தச் சூழ்நிலையில், கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் என்ற கட்டணத்தில், கடந்த  ஜூன் மாதம் கோவையில் களமிறங்கியது ரேபிடோ என்ற 'பைக் டேக்ஸி'. தமிழகத்துக்கு இந்தவகையான போக்குவரத்து புதியதாக இருந்தாலும் பெங்களூரு, விஜயவாடா மற்றும் வடமாநிலங்களில் ஏற்கெனவே இந்த பைக் டேக்ஸி புழக்கத்தில் இருந்து வருகிறது. ஓலா, உபர் நிறுவனங்களின் வாகனங்களைப் போன்றே 'மொபைல் ஆப்' மூலம் 'ரேபிடோ பைக் டேக்ஸியை' பயன்படுத்தலாம். மிகவும் குறைந்த கட்டணம் என்பதால் இந்த பைக் டேக்ஸி சிஸ்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆனால், சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய பைக்கில், சட்டத்தை மீறி கட்டணம் வசூலித்து, பயன்படுத்தி வருவதாக கோவை ஆட்டோ ஓட்டுநர்கள் 'ரேபிடோவுக்கு' எதிராக போர்க்கொடி எழுப்பினர். இதுதொடர்பாக வட்டாரப் போக்குவரத்துப் பிரிவிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், ரேபிடோவின் நான்கு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரேபிடோ பைக் டேக்ஸி

இதுகுறித்து கோவை ஆட்டோ ஓட்டுநர்கள், "ஓலா, உபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் ஏற்கெனவே எங்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டுள்ள சூழலில் ரேபிடோவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. பைக்கில் கட்டணம் வசூல் செய்துகொண்டு வாகனங்களை இயக்க எந்த அனுமதியும் கிடையாது. அப்படியிருக்கும்போது எந்த அடிப்படையில் அதுபோன்ற பைக்குகளை இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. இதனால், அதுபோன்றவர்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிடித்துக் கொடுத்தோம். அவர்களிடம், முறையாக எந்த ஆவணங்களும் இல்லை. 'அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம்' என்று அதிகாரிகள் உறுதியளித்திருக்கிறார்கள்" என்றனர்.

ரேபிடோ நிறுவனத்தின் கோவை பொது மேலாளர் இந்திர், "மத்திய அரசிடம் நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கியுள்ளோம். இங்கேயும், என்.ஓ.சி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். ஆனால், அனுமதி இன்னும் வழங்கவில்லை. இதைச் சேவை அடிப்படையில்தான், சோதனை செய்து பார்த்தோம். இதில், எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. 100 பேருக்கு வேலை வாய்ப்புதான் கிடைத்துள்ளது. எந்த வாகனமாக இருந்தாலும், விபத்து நடக்காமல் இருப்பது ஓட்டுநர்களின் கையில்தான் உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களின் ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களைச் சரிபார்த்துதான் அவர்களைப் பணி அமர்த்தி வருகிறோம். கடந்த வாரம்கூட, கோவை போக்குவரத்து துணை ஆணையரை வைத்து, ஹெல்மெட் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடத்தினோம்.

 

பைக்கில் வரும் பயணிகளுக்கும் ஹெல்மெட் வழங்கி வருகிறோம். குறிப்பாக, பயணத்தின்போது, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு ரெய்டு இன்சூரன்ஸ் கவர் ஆகும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். அரசு விதிகளை மீற வேண்டும் என்பதில்லை. இதற்காக அரசு வழங்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

"ஆட்டோக்களும், ஆம்னி பஸ்களும்கூட, பல்வேறு வகையில் சட்டத்தை மீறி இயங்கி வருகின்றன. கோவையில், ஏற்கெனவே குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டு, மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்ற மக்கள் ஆட்டோவுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டத்துக்குப் புறம்பாக இருப்பதை எதிர்ப்பவர்கள், முதலில் அந்தச் சட்டத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு எல்லோருக்குமே பாதிப்புதான். இந்த நேரத்தில், மக்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்பதால், பாதிக்கப்படுவது என்னவோ மக்கள்தான்" என்றனர் கோவைவாசிகள் சிலர். 

பைக் டேக்ஸி

கோவை வட்டாரப் போக்குவரத்து இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, "தமிழகத்தில் பைக் டேக்ஸி இயக்க இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. எனினும், அனுமதியின்றி சில இடங்களில் 'பைக் டேக்ஸி' இயக்கப்பட்டு வந்தது. அதுபோன்று இயங்குவது சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, இதுபோன்று அனுமதியில்லாத பொதுபோக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். தவிர, அதுபோன்ற பயணம் பாதுகாப்பற்றதும்கூட. ஹெல்மெட் அணிந்துதான் பைக்கில் செல்லவேண்டும். இருவர்தான் பயணம் செய்யவேண்டும். அதை மீறி, இப்படிக் கட்டணம் பெற்றுக்கொண்டு பைக்கை வாடகைக்கு இயக்குபவர்கள் மீது அனுமதியில்லாமல் வாகனத்தை இயக்கும் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றார். 

இந்தப் பிரச்னைக்கு, பெட்ரோல், டீசல் விலை உயர்வும் ஓர் முக்கியக் காரணம். அதேநேரத்தில், சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டால் நடவடிக்கை பாயும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்தச் சட்டமும், நடவடிக்கையும் எல்லோரிடத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கிறதா என்பதுதான் நம் கேள்வி?


டிரெண்டிங் @ விகடன்