வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:09:10 (08/10/2018)

`அரிய வகை உயிரினமான தேவாங்கைப் பாதுகாக்க சரணாலயம்!’ - கரூர் மக்கள் கோரிக்கை

உலக அளவில் அழிந்து வரும் பாலூட்டியான குரங்கு இனத்தைச் சேர்ந்த தேவாங்கு மிகவும் அரியவகை விலங்காகக் கருதப்படுகிறது.  `அந்த அரிய வகை உயிரினமான தேவாங்கு கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் மலைப் பகுதிகளில் வாழ்கின்றன. ஆனால், இரவு நேரத்தில் வாகனங்களில் அடிப்பட்டு தேவாங்குகள் உயிரிழப்பதாக" அந்தப் பகுதி மக்கள் புலம்புகிறார்கள். 

வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்த தேவாங்கு

கரூர் மாவட்டம்,கடவூர் பகுதியில் வட்ட வடிவில் மலைகள் அமைந்துள்ளன. புள்ளமுழுங்கி மலை, தொப்பைசாமி மலை என்று வித்தியாசமான பெயர்களைக் கொண்ட மலைகள் அந்தப் பகுதியில் அமைந்துள்ளன. இந்த மலைப் பகுதிகளில்தான் உலகின் மிக அரிய உயிரினமான தேவாங்குகள் வாழ்கின்றன. இந்த மலைக்கு அருகில் உள்ள வடவம்பாடி பகுதியில் இரவு நேரத்தில் தேவாங்கு ஒன்று ஏதோ வாகனத்தில் அடிப்பட்டு இறந்திருக்கிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர், ``நேற்று இரவுதான் அப்படி அடிப்பட்டு தேவாங்கு ஒன்று இறந்துவிட்டது. வருஷத்துக்கு முப்பதுக்கும் மேற்பட்ட தேவாங்குகள் இப்படி அடிப்பட்டு இறக்குது. ஏற்கெனவே அழியும் வகை உயிரினமாக இதை அறிவித்திருக்கிறார்கள். தேவாங்குகள் அதிக அளவில் வாழும் இந்தப் பகுதிகளில் வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் கொடுமை நடக்குது. தேவாங்குகள் இரவில்தான் இரை தேடும். பெரும்பாலும் பூச்சி வகைகளை உணவாக உட்கொள்ளும். அதனால், அந்தப் பூச்சிகளைத் தேடி மலையை விட்டு இறங்கி கீழே வரும்போது இப்படி வாகனங்களில் அடிபட்டு இறக்குதுங்க. தேவாங்குகளைப் பாதுகாக்க ஏதுவாக இந்தக் கடவூர் மலைப் பகுதிகளை தேவாங்குகள் சரணாலயமாக மாற்றும்படி அரசுக்கும், வனத்துறைக்கும் தொடர் கோரிக்கை வச்சுக்கிட்டு வர்றோம். ஆனால், யாரும் எங்க கோரிக்கையை செவிமடுக்கலை. இவங்க இப்படியே அசால்டா இருந்தா, இந்த மலையில் உள்ள எல்லா தேவாங்குகளும் இரை தேடி கிராமப் பகுதிகள், சாலைகளுக்கு வந்து வாகனங்களில் அடிபட்டே செத்துப்போகும் அபாயம் உள்ளது. அதனால், உடனே இங்கே தேவாங்குகளைப் பாதுகாக்க இந்தப் பகுதியைச் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்கள்.