வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:08:39 (08/10/2018)

தூத்துக்குடி கடலில் மாயமான 19 மீனவர்கள்! - தேடும் பணி தீவிரம்

தூத்துக்குடியிலிருந்து 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்று மாயமான 19 மீனவர்களை 3-வது நாளாக தீவிரமாகத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீனவர்களைத் தேடும் பணி

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர், விஜி, அந்தோணி, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த விக்கி, அன்சாரி, செல்வராஜ், எபிஸ்டன், சவேரியார் புரத்தைச் சேர்ந்த செல்வம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோபின் ஆகிய 9 பேரும், தாளமுத்துநகரைச் சேர்ந்த ரவி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தருவைகுளத்தைச் சேர்ந்த மிக்கேல்ராஜ், ஜெகன், வசந்த், திரேஸ்புரத்தைச் சேர்ந்த கில்பர்ட், சாயல்குடியைச் சேர்ந்த ஜோசப், தாளமுத்துநகரைச் சேர்ந்த வல்லவன், வேம்பாரைச் சேர்ந்த ராமர், ராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த டால்வின், வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தைராஜ் ஆகிய 10 பேரும் கடந்த 1-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

`தமிழகத்துக்கு ’ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடந்த 4-ம் தேதி முதல் 5 நாள்கள் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்’ என ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை அறிவிப்பு விடுத்தார். இதனையடுத்து, மீன்வளத்துறை மூலமும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அறிவிப்பைத் தொடர்ந்து பெரும்பாலான மீனவர்கள் கரைதிரும்பி விட்டனர். இந்நிலையில், ஆழ்கடல் பகுதியில் 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 19 மீனவர்கள் கரைக்குத் திரும்பாததால், விசைப்படகின் உரிமையாளர்கள் தொடர்பு கொண்டனர். அவர்களின் தொலைத்தொடர்பு கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாகவும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து அப்படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாயமான மீனவர்களின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 5-ம் தேதி மனு அளித்தனர். இந்நிலையில் `ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை மீறி தூத்துக்குடி மாவட்டக் கடல் பகுதியில் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்களா என வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடல் பகுதியில் கடலோரக் காவல்படைப் போலீஸார், நேற்று ரோந்துப் படகுகளில் 15 பேர் கொண்ட குழுவாக தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதிலும் மாயமான மீனவர்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாயமான மீனவர்கள் குறித்தும், அவர்கள் சென்ற படகுகளின் விவரம் குறித்தும் கடலோரக் காவல்படையினர், இந்தியக் கடற்படையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மீனவர்களை தேடும் பணி 3 வது நாளாக இரவு பகலாகத் தொடர்ந்து வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க