வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:08:34 (08/10/2018)

`இடைத்தேர்தல் தேதியை அறிவித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்' - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

இந்தியத் தேர்தல் ஆணையமும் மத்திய - மாநில அரசுகளின் ஊது குழல்களாக மாறுகிறார்களோ என்ற சந்தேகத்தைப் போக்கும் வகையில் உடனடியாக திருவாரூர் - திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின்

இந்தியா முழுவதும் ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்தில் காலியாக உள்ள 2  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியே இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், `சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கின்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகியவற்றுடன், சட்டமன்றத்தை தன்னிச்சையாகக் கலைத்துக் கொண்ட தெலங்கானாவுக்கும் சேர்த்து 5 மாநிலத் தேர்தல்களுக்கான அட்டவணையை, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒ.பி.ரவத் வெளியிட்டிருக்கிறார்.

அதேபோல், கர்நாடகாவில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 3 எம்.பி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இடைத்தேர்தலைச் சந்திக்கின்ற திருவாரூர் -திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தேதி அவருடைய அறிவிப்பில் இடம்பெறவில்லை. இரண்டு தொகுதிகளிலும் தற்போது இடைத்தேர்தல் இல்லை எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்திருப்பது, ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தை தமிழ்நாட்டு மக்களின் மனதில் விதைத்துள்ளது.

தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க அரசின் மக்கள் விரோதப் போக்குகள் மாநிலமெங்கும் கடும் அதிருப்தி அலைகளை எழுப்பியிருப்பதால், உள்ளாட்சித் தேர்தலைக்கூட கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தாமல், ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி காலந்தாழ்த்தி வருகிறது. தேர்தலை நடத்தினால் அதலபாதாளத்தில் தலைகுப்புற விழக்கூடிய படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பதால், ஊராட்சி அமைப்புகள் தொடங்கி மாநகராட்சிகள் வரை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, உள்ளாட்சி நிர்வாகம் மொத்தமும் நாற்றமடிக்கின்ற நிலையிலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அடிப்படை ஜனநாயக அமைப்புகளை ஏற்படுத்தாமல் இழுத்தடிக்கிறது. இந்த நிலையில், இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆட்சியாளர்களுக்கு தெம்பும் இல்லை, திராணியும் இல்லை. 

மக்களை நேரில் சந்தித்தால் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள், முதலமைச்சர் வரை பெரும் சங்கடத்தையும் சங்கிலித் தொடர்போன்ற எதிர்வினைகளையும் நேரில் காணப்போவது நிச்சயம். அதைத் தவிர்ப்பதற்காக இடைத்தேர்தலை தள்ளிவைக்கும் முயற்சியை, தலைமைச் செயலாளர் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார்கள். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தனது குடிமைப் பணியில் பெற்ற நற்பெயர்களுக்கு மாறாக, தற்போது ஆளுங்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் போலச் செயல்பட்டு வருவதை ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளேன். அரசு நிகழ்ச்சிகளை ஆளுங்கட்சியின் தனிப்பட்ட விழா போல நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருவதும், சுயவிருப்பு வெறுப்பின் அடிப்படையில் சட்டம் -ஒழுங்கு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தலைமைச் செயலாளரின் அண்மைக்காலச் செயல்பாடுகளாக இருக்கின்றன.

இந்தநிலையில், இரண்டு தொகுதி இடைத்தேர்தலை, பருவ மழையைக் காரணம் காட்டித் தள்ளி வைக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குத் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் அவர், அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் தேர்தலே நடந்ததில்லையா? ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்தபோது நடைபெற்ற 3 தொகுதிக்கான தேர்தல்கள் பருவமழைக் காலமான நவம்பர் மாதத்தில்தானே நடைபெற்றன. 

அதுபோல ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலும் மழைக்காலத்தையொட்டிய டிசம்பர் மாதத்தில்தானே நடந்தது. தற்போது 5 மாநிலத் தேர்தல்கள் நவம்பர் - டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், 2 தொகுதி இடைத்தேர்தலை மட்டும் மழையின் காரணமாகத் தள்ளி வைக்க வேண்டிய அவசியம் என்ன. ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடா குறித்த புகார்களின் அடிப்படையில் ஆதாரபூர்வமான பட்டியல்கள் அமைச்சர்களின் வீட்டு ரெய்டுகளில் சிக்கி, ஜனநாயகத்தை இந்த அரசு எந்தளவு சீரழித்திருக்கிறது என்பது அம்பலமானது. அதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இடைத்தேர்தல் மீண்டும் 2017 டிசம்பரில் நடத்தப்பட்டபோதும், ஏராளமான முறைகேடுகளும் பணப்பட்டுவாடாவும் நடந்தன.

அதையும் மீறி அப்போது தேர்தலை நடத்தியது ஆணையம். ஆனால், இப்போது 2 தொகுதி இடைத்தேர்தல்களை தலைமைச் செயலாளரின் கடிதத்தைக் காரணம் காட்டி தலைமைத் தேர்தல் ஆணையம் நடத்தாமல் இருப்பது வியப்பளிக்கிறது. திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பாக சட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும் அதுகுறித்து நீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெறுவதில் அக்கறை காட்டாமல், இடைத்தேர்தலை தள்ளி வைப்பதில் முனைப்பு காட்டுவது, மாநிலத்தை ஆளுகிற கட்சிக்கும், தமிழ்நாட்டில் மலர கணக்குப் போட்டு கனவு காணும் மத்திய ஆளும் கட்சிக்கும் உள்ள தேர்தல் பயத்தைக் காட்டுவதன் அடிப்படையில் நடந்த முயற்சியோ என்ற சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பின்போதே மத்திய பா.ஜ.க அரசின் விருப்பத்துக்கேற்ப, குறிப்பாக பிரதமர் மோடி அவர்களின் பயணங்களுக்கேற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதாக நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்தன. அதைப் புறக்கணித்த தலைமைத் தேர்தல் ஆணையம், தற்போது தமிழகத்தின் 2 தொகுதி இடைத்தேர்தல்கள் தொடர்பாக தலைமைச் செயலாளரின் கடிதத்தைக் காரணம் காட்டியிருப்பதும், பருவமழையைக் காட்டி ஒத்தி வைப்பதும் நியாயமான நடுநிலை நடவடிக்கையாகத் தெரியவில்லை.

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு எனக் கிராமப்புறங்களில் சொல்வதுபோல, மத்திய -மாநில ஆளுங்கட்சிகளுக்கு தேர்தல் களம் சற்றும் சாதகமாக இல்லை - படுதோல்வி நிச்சயம் என்பதால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. சுயாட்சிமிக்க அமைப்பான இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் - அரசு நிர்வாகத்தைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய தலைமைச் செயலாளரும் மத்திய - மாநில ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக மாறுகிறார்களோ என்ற சந்தேகத்தை நீக்கும் வகையிலும், ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படும் விதத்திலும் திருவாரூர் -திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்திட வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையத்தை வலிறுத்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.