வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (08/10/2018)

கடைசி தொடர்பு:12:20 (08/10/2018)

`நான் எதிர்கொண்ட வலிகளும் கஷ்டங்களும் ரொம்ப அதிகம்!' - ரீ என்ட்ரி சாந்தி வில்லியம்ஸ் உருக்கம்

சாந்தி வில்லியம்ஸ்

குணச்சித்திரம், வில்லி ரோல்களில் நடித்துப் புகழ்பெற்றவர், சாந்தி வில்லியம்ஸ். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் வில்லியாக மிரட்டத் தொடங்கியிருக்கிறார். மீண்டும் நடிக்கவந்திருக்கும் அனுபவத்தைப் பகிர்கிறார்.

``என் வீட்டுக்காரர் வில்லியம்ஸ், மலையாள சினிமாவில் பெரிய கேமராமேனாக இருந்தவர். அவர் மறைவுக்குப் பிறகு நான் எதிர்கொண்ட வலிகளும் கஷ்டங்களும் ரொம்ப அதிகம். சீரியல், சினிமா என ஓரளவுக்கு வாய்ப்புகள் வந்ததால் பிள்ளைகளை வளர்க்க முடிஞ்சது. என் கணவர் கேமரா உருவில் என்னை வாழவைப்பதாக நினைக்கிறேன். எனவே, கேமராவை கடவுளா நினக்கிறேன். ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கிலும் 'ஷாட் ரெடி'னு சொன்னதும், கேமராவைத் தொட்டு வணங்குவேன். சின்னவரோ, பெரியவரோ... அந்த கேமராமேன் கையைப் பிடிச்சு மரியாதையோடு வணங்குவேன். `இன்னிக்கு நல்லபடியா நடிக்கணும்'னு என் அம்மாவை மனசுக்குள்ளே வேண்டிப்பேன். அப்புறம்தான் நடிக்க ஆரம்பிப்பேன். இவை என்னுடைய பல வருஷத்துப் பழக்கம். 

சாந்தி வில்லியம்ஸ்

கிட்டத்தட்ட ரெண்டரை வருஷமா நடிக்கலை. நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்து, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். ஒரு வாரமா இந்த சீரியல் ஒளிபரப்பாகுது. ரொம்ப நெகட்டிவ் ரோல். 'மெட்டி ஒலி'க்கு இணையான நெகட்டிவ் ரோல். மக்கள் என்னை நிச்சயம் திட்டித் தீர்க்கப்போறாங்க. ரியல் லைஃப்ல நான் ரொம்ப அமைதியான கேரக்டர். ஆனால், பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்தான் எனக்கு வருது. அதுக்காக வருத்தமில்லை. கேரக்டர் எதுவா இருந்தாலும் சிறப்பா நடிக்கணும். ரெண்டரை வருஷத்துக்குப் பிறகு மீண்டும் கேமராவைத் தொட்டு வணங்கினப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. வயசை மறந்து சின்னக் குழந்தை மாதிரி மாறிட்டேன். இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு" என்கிற சாந்தி வில்லியம்ஸ் குரலில் பெரும் உற்சாகம்.