வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (08/10/2018)

கடைசி தொடர்பு:18:07 (09/10/2018)

`4 மணி நேரமா நனஞ்சி பஸ் ஓட்டுறேன்; அதிகாரிகள் கண்டுக்கல!'- அவலத்தைச் சொன்ன அரசு டிரைவர் சஸ்பெண்டு

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை என்னும் குற்றச்சாட்டு வலுத்துள்ளது. முக்கியமாக மழைக் காலங்களில் பெரும்பாலான பேருந்துகளுக்குள் தண்ணீர் ஒழுகும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலம் தொடங்கியதுமே `அரசுப் பேருந்துக்குள் தண்ணீர் ஒழுகும் அவலநிலை’ என்னும் செய்தியை கடக்காமல் இருக்க முடியாது. கடந்த ஆண்டு பராமரிக்கக்கூட நிதி இல்லாததால், 15,000 பேருந்துகள் காலாவதியான பிறகும் இயக்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தாண்டு இந்த நிலை சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும். மழைக் காலமும் தொடங்கிவிட்டது.  ஆனால், கடந்தாண்டு இருந்த அதே நிலைதான் இப்போதும் நீடிப்பதாகவே அரசுப் பேருந்து ஓட்டுநர்களே குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு பேருந்து ஓட்டுநர்
 

நேற்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கண்ணகிநகர் டெப்போவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தான் ஓட்டும் பேருந்தின் அவல நிலை குறித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் அவரின் இருக்கைக்கு மேல் குடை கட்டப்பட்டிருக்கிறது. 

விஜயகுமார்

திண்டுக்கல் - பழனி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றும் விஜயகுமார் என்னும் ஓட்டுநர் அரசுப் பேருந்தின் அவலநிலை பற்றி பேசி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், `திருச்சியில இருந்து வண்டி ஓட்டிட்டு வரேன். மழை பெய்தபடி இருக்கு. பேருந்தில் என் சீட்டுக்கு பக்கத்துல ஷட்டர்கூட இல்ல. வெளியில இருந்து அடிக்கும்  தூறல்ல முழுசா நெனஞ்சிட்டேன். அப்படியேதான் 4 மணி நேரமா பஸ் ஓட்டிக்கிட்டு வரேன். தினமும் இந்தக் கொடுமைய தான் அனுபவிச்சுட்டு வர்றோம். எனக்கு காய்ச்சல் வந்து படுத்துட்டா என் குடும்பத்தோட நிலை என்ன. அதிகாரிகள் யாரும் இத கண்டுகொள்ள மாட்றாங்க’ என வேதனையை ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். 

 

 

பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியும் அரசுப் பேருந்துகளின் நிலை மாறவேயில்லை என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து அரசை விமர்சித்து வருகின்றனர்.  இதில் கொடுமை என்னவென்றால் தன் நிலையை வீடியோவாக வெளியிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியின்போது அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி விஜயகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

ராமதாஸ்

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `சென்னையில் ஒழுகும் நகரப் பேருந்துகளை குடை பிடித்தவாறு இயக்கும் ஓட்டுநர்கள்: செய்தி-  சென்னை மாநகரப் பேருந்துகள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகமும் ஒழுகிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு யார் குடை பிடிக்கப் போகிறார்களோ. 'தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணம் உயராது: போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்' -  ஓ... இப்போது இது ஒன்றுதான் குறைச்சல் போலிருக்கிறது. ஓட்டை உடைசல் பேருந்துகளுக்கு கட்டணத்தை உயர்த்திதான் பாருங்களேன்!' என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.


அரசுப் பேருந்துகளின் நிலை குறித்த உங்களின் கருத்தை இங்கே பதிவு செய்யலாம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க