வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (08/10/2018)

கடைசி தொடர்பு:13:03 (08/10/2018)

` இடைத்தேர்தல் வேண்டாம் என எப்போது முடிவெடுத்தார்?' - ஆளுநர் பேச்சும் எடப்பாடி பழனிசாமி கடிதமும்

`தேர்தல் நடத்தத் தயாராக இருக்கிறோம்' என தொண்டர்களையும் பொதுமக்களையும் நம்ப வைக்கும் வகையிலேயேதான் மதுரையில் கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

` இடைத்தேர்தல் வேண்டாம் என எப்போது முடிவெடுத்தார்?'  - ஆளுநர் பேச்சும் எடப்பாடி பழனிசாமி கடிதமும்

மிழக இடைத்தேர்தல் தேதி தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணி குறித்து தீவிர விவாதம் கிளம்பியுள்ளது. ' திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க வருவதற்கு முன்னரே இப்படியொரு கடிதம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இதை வெளிக்காட்டாமல்தான் கூட்டத்தை நடத்தினார் முதல்வர்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை நேற்று முன்தினம் அறிவித்தார். இதில், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தமிழக அரசியல் கட்சிகள் காத்திருந்தன. ஆனால், மழையைக் காரணம் காட்டி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி, இப்போதைக்குத் தேர்தல் இல்லை என அறிவித்தார் ஓ.பி.ராவத். இந்தத் தகவல் தினகரன் தரப்புக்குக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து, ` தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எப்போது கடிதம் அனுப்பினார் தலைமைச் செயலாளர்?' என்ற கேள்வி அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது. 

இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், `` தலைமைச் செயலாளரின் கடிதத்துக்குப் பின்னால் பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் சென்ற பிறகுதான், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக கடந்த 4-ம் தேதி மதுரையில் கூட்டம் நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. `தேர்தல் நடத்தத் தயாராக இருக்கிறோம்' என தொண்டர்களையும் பொதுமக்களையும் நம்ப வைக்கும் வகையிலேயேதான் அவர் கூட்டத்தையும் நடத்தினார். திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக இருந்தார் தினகரன். அவருக்கு முன்பாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவிட வேண்டும் என முடிவு செய்தார் முதல்வர். ஆறாம் தேதி இப்படியொரு அறிவிப்பு வரப் போகிறது என்பதும் அவருக்குத் தெரியும். முதல்வர் அனுமதியில்லாமல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியிருக்க மாட்டார். மூத்த அமைச்சர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம், அனைத்தையும் வெளிப்படுத்திவிட்டது. சொல்லப் போனால், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் முட்டாள்களாக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் நிஜம். 

எடப்பாடி பழனிசாமி

தற்போது தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்லத் தயாராகி வருகிறார் தினகரன். கடந்த வாரம் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லியையும் நிர்மலா சீதாராமனையும் சந்திக்கச் சென்றனர் தமிழக அமைச்சர்கள். இந்தச் சந்திப்பில் வைக்கப்பட்ட முதல் கோரிக்கையே தேர்தல் நடத்தக்கூடாது என்பதுதான். நேற்று தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு எதிராக ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தி.மு.க போட்ட வழக்குக்கும் தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நவம்பரில்தான் மழை வரப் போகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் டிசம்பரில்தானே நடந்தது. தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே கடிதம் எழுதியிருக்கிறது தமிழக அரசு" என்றார் விரிவாக. 

அதேநேரம், இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்,  ``தமிழக அரசின் கடிதத்தை முன்வைத்து தேர்தல் நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தேர்தல் ஆணையம் சொல்கிறது. தமிழக அரசு சொல்வதை மத்திய அரசு கேட்பதில்லை என்பதுதான் உண்மை. மத்திய அரசுடன் தமிழக அரசுக்கு சுமுகமான உறவு இல்லை. இருவருக்கும் இடையில் இணக்கமான உறவு இருந்திருந்தால், கிறிஸ்டி நிறுவனம், செய்யாதுரை ஆகியோரை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை ஏன் நடத்தப்பட வேண்டும். துணைவேந்தர் நியமன  ஊழல் குறித்து ஆளுநர் பேச வேண்டிய அவசியம் ஏன். ` இது ஓர் ஊழல் மிகுந்த மாநிலம்' என அமித் ஷா பேச வேண்டிய தேவை ஏன் வந்தது. நத்தம் விஸ்வநாதன் வீட்டில்  ரெய்டு நடந்தபோது, அவரது பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. அதுவே விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது, அவர் மீது எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மத்திய அரசுக்கு சவால்விடுவதைப் போலத்தான் பார்க்க வேண்டும். 

தேர்தலை நிறுத்தியதில் மாநில அரசுக்குப் பங்களிப்பு இருக்கிறது. `தமிழ்நாடு அரசின் கடிதத்தை டிஸ்கஸ் செய்ததால்தான், அறிவிப்பை வெளியிடுவதில் இரண்டரை மணிநேரம் தாமதம் ஏற்பட்டது' என தலைமைத் தேர்தல் ஆணையர் சொல்கிறார். தேர்தல் நடத்தினாலும், ஆணையத்தின் மீது விமர்சனம் கிளம்பும். தேர்தல் நடத்தாததால் அதுகுறித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவது இயல்பானதுதான். 89 உறுப்பினர்கள் இருந்தும் ஆர்.கே.நகரில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது தி.மு.க. அதேநேரம், ஆர்.கே.நகரில் 27 சதவிகித வாக்குகளை வாங்கியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. இப்படியொரு கடிதம் அனுப்புவதற்குக் காரணம், `பொதுத்தேர்தல் நடந்தால் தினகரனால் அனைத்து தொகுதிகளிலும் தினகரனால் போட்டியிட முடியாது. இது நமக்குச் சாதகமாகும். எனவே, இடைத்தேர்தல் வேண்டாம்' என முடிவெடுத்தார் முதல்வர். இதுகுறித்து மூத்த அமைச்சர்களிடம் விவாதித்த பிறகே, தலைமைச் செயலாளர் மூலமாக கடிதத்தை அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி" என்றார். 

இது ஓர் ஊழல் அரசு என பா.ஜ.கவின் அனைத்து நிர்வாகிகளும் விமர்சனம் செய்யும் வேளையில், ` எடப்பாடி பழனிசாமி பேச்சைக் கேட்டு முடிவெடுக்குமா தேர்தல் ஆணையம்?' என்ற கேள்வி அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது. இதற்கான விடையை நேற்று துரைமுருகன் பேசியதில் இருந்தே கவனிக்கலாம். ` துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டது என்று அப்போதே கவர்னர் சொல்லியிருக்கலாம். அந்தநேரத்தில் இந்த ஆட்சியை கவர்னர் பாராட்டிப் பேசினார். இப்போது திடீரென்று அவர் சொல்வது ஏன். கவர்னர் இதைக் கூறியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, என் அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். எங்கேயோ உதைக்கிறது. விடிவதற்கு முன்பு சேவல் கூவுவதுபோல், கவர்னர் இப்போது கூறுவதால், இதை வைத்து சில விஷயங்கள் நடக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரலாம். வேறு எதுவும் நடக்கலாம். ஆனால் இந்த ஆட்சி நாடாளுமன்றத் தேர்தலை தாண்டிச் செல்லாது. கவர்னரின் சூட்சுமம் என்ன என்பது விரைவில் தெரியும்' என்றார். இந்தப் புள்ளியில் இருந்துதான் ஒட்டுமொத்த அரசியலையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.