வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (08/10/2018)

கடைசி தொடர்பு:18:06 (09/10/2018)

`தப்பு பண்ணிட்டேன்; புருஷனோடு என்னைச் சேர்த்திடுங்க!'- பெற்ற குழந்தையைக் கொன்ற தாய் வாக்குமூலம்

தாய் உமாவால் கொல்லப்பட்ட குழந்தை

`தப்பு பண்ணிட்டேன் சார், புருஷனோடு என்னைச் சேர்த்திடுங்க' என்று பால் கொடுக்கும்போது ஏற்பட்ட மார்பு வலிக்காக குழந்தையைக் கொன்ற தாய் உமா, கண்ணீர்மல்க போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

சென்னை வேளச்சேரி, திரௌபதி அம்மன் கோயில் 5-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கண்ணா. பி.ஏ. படித்துவிட்டு கால் சென்டரில் பணியாற்றுகிறார். இவரின் மனைவி உமா. பி.சி.ஏ. படித்துவிட்டு வேளச்சேரியில் உள்ள மாலில் பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் இரண்டாண்டுகள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர்.  உமாவுக்கு கடந்த 33 நாள்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சார்விக் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், குழந்தையைக் காணவில்லை என்று உமா கூறியதன்பேரில் வெங்கண்ணா, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் பாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், விஸ்வநாதன், தமிழ்செல்வி, பகவதி ஆகியோர் விசாரணை நடத்தினர். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். பிறகு, உமா, வெங்கண்ணா, அவர்களின் வீட்டின் அருகில் குடியிருப்பவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் குழந்தை காணாமல் போன தினத்தன்று அதிகாலையில் பெண் ஒருவர், தலையில் மப்ளரை அணிந்துகொண்டு ஆரஞ்ச் நிற நைட்டி அணிந்தபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஏரிப் பகுதிக்குச் சென்றதைப் பார்த்ததாக உமா வீட்டின் அருகே வசிக்கும் 56 வயது பெண், போலீஸாரிடம் தெரிவித்தார். இதுதான் இந்த வழக்கில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 56 வயது பெண் கூறிய நைட்டியின் நிறம், மப்ளர் ஆகியவற்றைக் கொண்டு குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்ற மர்மப் பெண் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது உமாவின் நடவடிக்கைகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. முதலில் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் ஆரஞ்ச் நிற நைட்டி அணிந்திருந்தார். அப்போது குழந்தை எப்படி காணாமல் போனது என்று உமாவிடம் கேட்டபோது வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்போது மாயமாகிவிட்டதாக தெரிவித்தார். உடனே போலீஸார், அந்தச் சமயத்தில் நீங்கள், வெங்கண்ணா ஆகியோர் எங்கு இருந்தீர்கள் என்று கேட்டதற்கு தூங்கியதால் எதுவும் தெரியவில்லை என்று உமா கூறினார். 

 
இதையடுத்து, குழந்தையைத் தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தினர். அதே நேரத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மூலம் உமாவிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சமயத்தில் அவர் வேறு ஆடை அணிந்திருந்தார். இது, அவர் மீதான சந்தேகத்தை மேலும் ஏற்படுத்தியது. உடனே வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் ஆரஞ்ச் நிற நைட்டி, மப்ளரைத் தேடினர். உமாவின் வீட்டுக்குள் அது, இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுதொடர்பாக விசாரித்தபோது உமாவின் நடவடிக்கைகள் மாறின. முகத்தில் ஒருவித பயமும் தெரிந்தது.  தொடர்ந்து உமாவிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன. ஒருகட்டத்தில் நீங்கள் குழந்தையை ஏரியில் வீசியதை அந்தப் பகுதியில் உள்ள சிலர் பார்த்துள்ளனர் என்று போலீஸார் கேட்டதும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. குழந்தை காணாமல் போனதிலிருந்து உமா அழாமல் இருந்தார். போலீஸாரின் இந்தக் கேள்வியைக் கேட்டபிறகு அவரின் கண்கள் கலங்கின. அதன்பிறகு அவரே உண்மையை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``உமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் எல்லோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உமாவும் குழந்தையை நன்றாக கவனித்துள்ளார். குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது அவருக்கு மார்பு வலித்துள்ளது. அதை வீட்டில் உள்ளவர்களிடம் கூறிய உமாவுக்கு ஆளாளுக்கு அறிவுரைகள், டிப்ஸ்களைக் கொடுத்துள்ளனர். அதையெல்லாம் அவர் பின்பற்றினாலும் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைக்குப் பால் கொடுப்பதை அவர் நிறுத்தியுள்ளார். பாலுக்காக குழந்தை அழுதபோது வலி காரணமாக அவர் பால் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் வலிக்கான மாத்திரைகள் அவருக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதை, வெங்கண்ணா சாப்பிட அனுமதிக்கவில்லை.

ஒருபக்கம் குழந்தையின் அழுகை, மறுபக்கம் மார்பு வலி என இருதலைக் கொள்ளி எறும்பாக உமா தவித்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் குழந்தை காணவில்லை என்று கூறிவிட்டால் பால் கொடுக்க வேண்டாம் என்று கருதிய உமா, யாருக்கும் தெரியாமல் தூக்கிக்கொண்டு அதிகாலையில் மெதுவாக நடந்து சென்றுள்ளார். அப்போது குழந்தையை எங்கு விடலாம் என்று யோசித்த உமாவுக்கு அதற்கான விடை தெரியவில்லை. அப்போதுதான் குழந்தை உயிரோடு இருந்தால் மீண்டும் பால் கொடுக்க வேண்டும். அப்போது மார்பு வலிக்கும் என்று கருதிய உமா, குழந்தையை ஏரிக்குள் வீசிவிடலாம் என்று முடிவு செய்துள்ளார். வீட்டிலிருந்து சிறிதுதூரம் நடந்து சென்ற உமா, குழந்தையை ஏரிக்குள் வீசிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். கணவரிடமும் உறவினர்களிடமும் குழந்தை காணவில்லை என்று நடித்துள்ளார். அதை அவர்களும் நம்பி குழந்தையை தீவிரமாக தேடியுள்ளனர். இந்தச் சமயத்தில்தான் நைட்டி, மப்ளர் அணிந்தபடி உமா குழந்தையை தூக்கிச் செல்வதை அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பார்த்து எங்களுக்கு அடையாளம் தெரிவித்தார். அவர்கூறிய நைட்டியின் கலர் மப்ளர் ஆகியவை உமாவின் வீட்டில் இருந்தது. அதைக் காட்டி விசாரித்தபோதுதான் உமா உண்மையை எங்களிடம் கூறினார். குழந்தை மாயம் என்று வழக்கு பதிவு செய்த நாங்கள், கொலை (302), தடயத்தை மறைத்தல் 201) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்துள்ளோம். இதற்கு அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை கிடைக்கவாய்ப்புள்ளது" என்றனர். 

உமாவை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திவிட்டு புழல் பெண்கள் சிறைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அதுவரை அமைதியாக இருந்த உமா, சிறையின் அருகே செல்லும்போது கதறி அழுதுள்ளார். `சார், தப்பு பண்ணிட்டேன், தயவு செய்து என்னை என் புருஷனோடு சேர்த்துவைத்திடுங்க' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவருக்கு போலீஸார் ஆறுதல் கூறி சிறையில் அடைத்துள்ளனர். 

மனைவிதான் குழந்தையைக் கொலை செய்தார் என்று தகவலறிந்த வெங்கண்ணாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உமாவின் இந்தச் செயலால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் தவித்துக்கொண்டிருக்கிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மார்பு வலி ஏற்பட்டால் அதற்குரிய ஆலோசனைகளை டாக்டர்களிடம் கேட்டிருந்தால் குழந்தையை உமா கொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தவறான முடிவை அவர் எடுத்ததால் இன்று சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் உமா.