வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (08/10/2018)

கடைசி தொடர்பு:16:05 (08/10/2018)

சிதம்பரத்தில் சிக்கிய ருவாண்டா மாணவர்கள்! - மதுபாட்டில்கள், கார்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நேற்று இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது புதுச்சேரியிலிருந்து காரில் மது பாட்டில்கள் கடத்திய ருவாண்டா நாட்டைச் சேர்ந்த 4 மாணவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து  ரூ.2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் 2 கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரத்தில் கைதான ரூவாண்டா மாணவர்கள்

சிதம்பரம்  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இங்கு தங்கி படித்து வருகின்றனர்.  சிதம்பரம் அருகே உள்ள மீதிக்குடி பகுதியில் தங்கிப் படித்து வந்த ருவாண்டா நாட்டைச் சேர்ந்த பரகாபேட்ரிக், நடாக்கிகுட்டிமான அலெக்ஸ், நிக்கோடினாயுனாம், முக்விசாஆலவர் ஆகிய 4 மாணவர்கள் நேற்று இரவு காரில் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வந்துள்ளனர்.

அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீஸார் அண்ணாமலை நகர் பகுதியில் வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது போலீஸார் மாணவர்களின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து 2 கார் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.