வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (08/10/2018)

கடைசி தொடர்பு:14:30 (08/10/2018)

மாயமான 19 மீனவர்கள்! - டோனியர் விமானம் மூலம் 4வது நாளாகத் தொடரும் தேடுதல் பணி

தூத்துக்குடியிலிருந்து 2 விசைப்படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மாயமான 19 மீனவர்களைத் தீவிரமாகத் தேடும் பணி டோனியர் விமானம் மூலம் 4வது நாளாகத் தொடர்கிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்துரி தெரிவித்துள்ளார். 

மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்துரி


தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்களும், இதே பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும் கடந்த 1-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். தமிழகத்துக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்படவுடன் கடந்த 4-ம் தேதி முதல் 5 நாள்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்  என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு விடுத்தார். 

மீன்வளத்துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடலோரக் கிராமங்களில் எச்சரிக்கை விடப்பட்டது. பெரும்பாலான விசைப்படகுகளில் சென்ற  மீனவர்கள் கரை திரும்பிய நிலையில், 2 படகுகள் மட்டும் கரைதிரும்பவில்லை. தொலைத்தொடர்பு கருவி மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை என படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து படகு உரிமையாளர்கள், உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடலோரக் காவல் படையினர் தீவிரமாகத் தேடியும் மீனவர்கள் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இந்திய கடற்படைக்கு படகு மற்றும் மீனவர்களின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 4வது நாளாக தீவிரமாகத் தேடும்பணி நடைபெற்று வருகிறது. 

இது குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், ``தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 19 மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓமன், மாலத்தீவு பகுதி கடற்படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் 2 டோனியர் விமானம் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.  விரைவில் மாயமான மீனவர்கள் மீட்கப்படுவார்கள். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் கழிவுகளை அகற்றுவது சம்பந்தமாக ஆலையிடமிருந்து திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன் பின்னர் எஞ்சியிருக்கும் காப்பர் கழிவுகள் அகற்றப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 36 பகுதிகள் வெள்ள அபாயப் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகை பேரிடர் மீட்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க