வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (08/10/2018)

கடைசி தொடர்பு:14:43 (08/10/2018)

100 ரூபாய் குவார்ட்டர் 120-க்கு விற்பனை.. டாஸ்மாக் கடையில் மல்லுக்கட்டிய குடிமகன்கள்

கோவை, ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி விற்பனையாளர்களிடம், குடிமகன்கள் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

டாஸ்மாக்

கோவை மாவட்டம்,  ஆனைகட்டி மலை கிராமம் அருகே இருக்கிறது ஜம்புகண்டி என்ற பகுதி. அங்கு, கடந்த 3 மாதங்களாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தமிழக – கேரள எல்லை என்பதால், கேரளா அகழி, கோட்டத்துறை, முக்காளி, சிறுவாணி பகுதிகளிலிருந்து நிறைய குடிமகன்கள் வருவதால், விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கோவை வடக்கு வட்டத்தில் தினமும் அதிகம் பணம் வசூல் மற்றும் விற்பனையில் இந்த டாஸ்மாக் கடைதான் முதல் இடம்.

இந்நிலையில், அங்கு அரசு நிர்ணயம் செய்த விலையை விட (100 ரூபாய் குவார்ட்டர்) 120 முதல் 130  ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். அதேபோல, பீர் ரூபாய் 150 முதல் 160 வரை விற்பனை செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால், கடுப்பான குடிகாரர்கள் நேற்று அந்தக் கடையின் விற்பனையாளர்களை வசைபாடி, வாக்குவாதம் செய்துள்ளனர்.

``100 ரூபா க்வாட்டர் கீழே (சமவெளிப் பகுதி) 105-க்குதான் விக்கிறாங்க. ஆனா, நீங்க அநியாயமா 120 ரூபாக்கு விக்கிறீங்க. என்னத்துக்கு நாங்க எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும். இது எங்க ஊரு. நாங்க கேட்போம். நீ இந்தச் சரக்க எவ்ளோக்கு வாங்கற..? எம்.ஆர்.பி என்ன? சொல்லு..." என்று வறுத்தெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

``இந்தக் கடைக்கு அனுமதி இருக்கிறதா என்பதே தெரியவில்லை. தற்போதுவரை டாஸ்மாக் போர்டும் வைக்கவில்லை. இதெல்லாம், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கிறது. நிறைய போலி மதுபானம் மற்றும் கலப்படம் செய்தும் மது விற்பனை செய்கிறார்கள்” என்று குடிமகன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.