வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (08/10/2018)

கடைசி தொடர்பு:15:20 (08/10/2018)

112 ஸ்டால்கள்! - வேலூர் உழவர் களஞ்சியத் திருவிழாவில் குவிந்த மக்கள் #பசுமைவிகடன்

இயற்கை கைவினைப்பொருள்கள், பாரம்பர்ய உணவுப்பொருள்கள் என மொத்தம் 112 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேலூரில் உழவர் களஞ்சிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 

களஞ்சிய திருவிழா

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி (VIT)  மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பசுமை விகடன் இணைந்து நடத்தும் 4-ம் ஆண்டு உழவர் களஞ்சியத் திருவிழா (2018) வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக, வி.ஐ.டி விஸ்வநாதன் மற்றும் ஆப்பிரிக்க - ஆசிய ஊரக வளர்ச்சித்துறையின் பொதுச்செயலாளர் வஸ்ஃபி ஹஸன் எல்-ஸ்ரிஹின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து விவசாயம் குறித்து சிறப்புரை ஆற்றினர்.

இவ்விழா 8.10.2018 இன்று மற்றும் 9.10.2018 நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் முக்கிய அம்சமாக இயற்கை வேளாண் விளைபொருள்கள், பாரம்பர்ய விதை வகைகள், ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் விவசாய நூல்கள் மற்றும் சிறப்புக் கையேடுகள், அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் தற்சார்பு வாழ்க்கை முறை விளக்க மையங்கள், வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகத் தீர்வு மையங்கள், தோட்டக்கலை, மாடித்தோட்டம் வளர்ப்பு முறை, மரக்கன்று சிறப்பு விற்பனை மையம், பண்டைய வேளாண் வாழ்க்கை முறை, ஆர்கானிக் உரங்கள், பஞ்சகவ்யம், மண்புழு உர தயாரிப்பு மற்றும் செயல்முறை, தமிழ்நாடு வனத்துறை மூலமாக தேக்கு மரம் வளர்ப்பு முறை, வேளாண் விளைபொருள்களை இணையவழி மூலமாக சந்தைப்படுத்தும் முறை, விவசாய வங்கிக்கடன் உதவி, எண்ணைவித்துக்கள், கீரை வளர்ப்பு முறை, பசுமைக்குடில், மாடித்தோட்டம், இயற்கை கைவினைப்பொருள்கள், பாரம்பர்ய உணவுப்பொருள்கள் மற்றும் உணவுவகைகள் என மொத்தம் 112 ஸ்டால்கள் (அரங்குகள்) அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த உழவர் களஞ்சிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமில்லாமல் வேளாண் அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று மதியம் 2 மணிக்கு காய்கறி மற்றும் பழங்களில், அறுவடைக்குப் பிறகான தொழில்நுட்பங்கள் என்னும் தலைப்பில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி முனைவர். எஸ். புவனேஸ்வரி கருத்தரங்கும், மாலை 3 மணிக்கு `இயற்கை வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு' என்ற தலைப்பில் காந்தி கிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் நிலையத்தின் ஓய்வுபெற்ற தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி முனைவர். ஏ.உதயகுமாரின் கருத்தரங்கு நடைபெற உள்ளது.