வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (08/10/2018)

கடைசி தொடர்பு:15:35 (08/10/2018)

அக்னி தீர்த்தத்தில் கலந்த கழிவு நீர்! - புனித நீராட ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் வேதனை

கன மழை பெய்யும் என அறிவிப்பு செய்யப்பட்டதால் மகாளய அமாவாசை தினமான இன்று வழக்கத்தைவிடக் குறைவான அளவிலான பக்தர்களே ராமேஸ்வரத்தில் புனித நீராட வந்திருந்தனர். இந்த நிலையில், அக்னி தீர்த்தத்தின் ஒரு பகுதியில் கழிவு நீர் கலந்ததால் பக்தர்கள் புனித நீராடத் தயங்கினர்.

மஹாளய அமாவாசை தினத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள்

இந்துக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக அமாவாசை தினங்களில் நாட்டில் உள்ள புனித நீர் நிலைகளில் நீராடி விரதம் இருப்பது வழக்கம். இதில் தை, மாசி, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படும். இந்த நாளில் பிதுர்களான தாய், தந்தை, மூதாதையர் நினைவாக விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்வதுடன், அவர்களுக்குப் பிடித்த உணவுகளைப் படைப்பதுடன் எள் தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழக்காய் போன்றவற்றைக் கொண்டு தர்ப்பணம் வழங்குவர்.

அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த யாத்திரையினர்
 

புரட்டாசி மகாளய அமாவாசை தினமான இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ராமேஸ்வரம் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் பலர் மறைந்த தங்கள் முன்னோர்கள் நினைவாகக் கடற்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து திதி கொடுத்தனர்.

வழக்கமாக இத்தகைய அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரம் கடலில் நீராடுவது வழக்கம். ஆனால், இன்றைய தினம் கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடப்பட்டதால் பெரும்பாலானவர்கள் தங்களது ராமேஸ்வரம் பயணத்தை ரத்து செய்துவிட்டனர். ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்ட நிலையிலும் பெரும்பகுதி பக்தர்கள் ராமேஸ்வரம் வருவதைத் தவிர்த்து விட்டனர். இதனால் இன்று காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குறைந்த அளவிலான பக்தர்களே புனித நீராடினர். அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர். ஆனால், வழக்கத்தைவிடக் குறைவான பக்தர்களே இன்று  வருகை தந்ததால் பகல் 12 மணிக்கே நெருக்கடி இல்லாத நிலை ஏற்பட்டதால் போலீஸார் திரும்பப் பெறப்பட்டனர். 

அமாவாசை தினத்தில் அக்னி தீர்த்தத்தில் கலந்த கழிவு நீர்
 

இதனிடையே அமாவாசை தினமான இன்று பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலின் ஒரு பகுதியில் புனித நீராடிக் கொண்டிருந்த வேளையில் அக்னி தீர்த்தத்தின் மறு பகுதியில் நகரில் உள்ள கழிவு நீர் பெருக்கெடுத்து வந்து கடலில் கலந்துகொண்டிருந்தது. இதைக் கண்ட பலர் மனம் வெதும்பிய நிலையில் கடலில் இறங்காமல், வேறு வழியின்றி பேருக்கு சிறிது நீரை மட்டும் எடுத்து தலையில் தெளித்தவாறு சென்றனர்.