வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (08/10/2018)

கடைசி தொடர்பு:15:16 (08/10/2018)

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த ஓ.எஸ்.மணியன்!

OS Maniyan

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இன்று அந்திம புஷ்கர விழா கொண்டாடப்பட்டது. மேலும், இன்று சர்வ மகாளய அமாவாசை நாள் என்பதால், இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காவிரியில் நீராடி ஜெயலலிதா மற்றும் முன்னோருக்குத் திதி கொடுத்தார்.  

ஓ எஸ் மணியன்

நாகை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் சர்வ மகாளய அமாவாசையன்று கோடியக்கரை, வேதாரண்யம், பூம்புகார் ஆகிய கடற்கரைகளிலும், திருவெண்காடு சுவேதாரண்யம் கோயில் மற்றும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்திலும் மறைந்த முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது வழக்கம். இன்றைய நாளில் திதி கொடுத்து தானம் செய்தால் அது முன்னோர்களின் பசியைத் தீர்த்து அவர்களின் ஆசியைப் பெறலாம் என்பது ஐதிகம். ஆனால், இன்று காலை முதலே விட்டு விட்டு கனமழை பொழிந்ததால் திதி கொடுக்கும் புனிதமான இடங்களுக்குப் பொதுமக்கள் அதிகளவில் போக முடியவில்லை.  

இந்நிலையில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த காவிரி புஷ்கர விழா ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அந்திம புஷ்கரம் இன்று கொண்டாடப்பட்டது. சர்வ மகாளய அமாவாசையோடு அந்திம புஷ்கரமும் இணைந்ததால் முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுக்க இது சிறந்தநாள் என்கிறார்கள். எனவே, இன்று மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடினார். அதன்பின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தன் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து தர்ப்பணம் செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், “தமிழக மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும், தமிழக அரசிடம் அனுமதி கேட்கும்போது அதைத் தமிழக அரசு எதிர்க்கும். ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரனைத் தனிமையில் சந்தித்த நிகழ்ச்சியைத் தினகரன் வெளியிட்டது அரசியல் நாகரிகமில்லை. தினகரன் அரசியலுக்கு லாயக்கற்றவர்” என்றார்.