வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (08/10/2018)

கடைசி தொடர்பு:16:25 (08/10/2018)

தொழில்துறையில் யுகாமர்ஸின் தாக்கம்! - கருத்தரங்கில் குவிந்த ஆசிரியர்கள், மாணவர்கள்

யுகாமர்ஸ் தொழில்நுட்பத்தின் உறுதுணையோடு 2050-ம் ஆண்டில் தொழில்துறையின் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து யுபிகாம் 2018 (UBICOM 2018) என்ற தேசிய அளவிலான யுகாமர்ஸ் ஒருநாள் கருத்தரங்கு, சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (6.10.2018) நடைபெற்றது. இக்கருத்தரங்கில், தொழில்துறையில் யுகாமர்ஸ் பயன்பாடு குறித்த சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்வதும், இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொழில்முனைவோர்கள் எப்படி சாதகமாக்கிக்கொள்வது என்பது குறித்தும் இன்றைய இளைஞர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. 

லலிதா பாலகிருஷ்ணன்

இக்கருத்தரங்கின் தொடக்கவிழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் லலிதா பாலகிருஷ்ணன் பேசுகையில், நம் அனைவருக்கும் காமர்ஸ், இகாமர்ஸ் குறித்து தெரிந்திருக்கும். யுகாமர்ஸ் என்பது வளர்ந்துவரும் புதுமையான தொழில்நுட்பம் என்பது மட்டுமல்லாமல், வருங்கால தொழில்துறையில் யுகாமர்ஸின் பங்கு பெரிய அளவில் இருக்குமென்ற காரணத்தால் இதுகுறித்த தெளிவான பார்வையை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கை நடத்துகிறோம் எனக் குறிப்பிட்டார்.

இக்கருத்தரங்கில் தொடக்க உரையாற்றிய தமிழக அரசின் ஆட்சிப்பணி முதல்நிலைச் செயலாளர் மங்கள் ராம் சர்மா பேசுகையில், யுகாமர்ஸ் தொழில்நுட்பத்தின் சிறப்புகள் பற்றியும், அரசின் செயல்பாடுகளில் யுகாமர்ஸ் பயன்பாடு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் எடுத்துக் கூறினார். இதுபோன்ற தேசியக் கருத்தரங்குகள் மாணவர்கள் மத்தியில் புதிய பார்வையையும் புத்தாக்கச் சிந்தனையையும் ஏற்படுத்தும் என்று பாராட்டினார்.

யுகாமர்ஸின் தற்கால வளர்ச்சி குறித்து வேல்டெக் டி.பி.ஐ நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜாராம் வெங்கட்ராமன் பேசும்போது, தொழில்துறையில் யுகாமர்ஸின் தாக்கம் எந்த அளவுக்கு நுகர்வோருக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று விளக்கினார். தொலைபேசி தொழில்நுட்பம், 100 மில்லியன் மக்களைச் சென்றடைவதற்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதென்றும், இன்டெர்நெட் தொழில்நுட்பம், இலக்கை எட்ட 12 ஆண்டுக்காலம் பிடித்ததென்றும், தற்போதுள்ள வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவை ஓரிரு மாதங்களிலேயே இலக்கை எட்டிவிட்டதையும் குறிப்பிட்டார். இதன்மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவையும் நுகர்வும் மக்களிடையே பன்மடங்கு அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஆன்லைன் ஷாப்பிங்கில் உதவும் விர்ச்சுவல் அசிஸ்டென்ட், நம்மை தனி உலகில் பயணிக்கவைக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி, சாட் பாக்ஸ் தொழில்நுட்பம், அமேசான் டெலிவரிக்குப் பயன்படும் டிரோன்கள் என்று யுகாமர்ஸ் தொழில்நுட்பத்தின் தற்கால வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார்.

ராஜாராம் வெங்கட்ராமன்

`இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’ என்ற தலைப்பில் பேசிய டாட் கோர் ஏஐ (.kore.ai) நிறுவனத்தின் சீஃப் மார்க்கெட்டிங் ஆபீஸர் சாய்ராம் வேதம், மனிதர்களுக்கும் ஆர்ட்டிஃபீசியல் இன்டெலிஜென்டுக்குமான உரையாடல்கள் யுகாமர்ஸ் பயன்பாட்டால் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என்பதை விளக்கப்படங்களுடன் விவரித்தார். மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அவை செயல்படத் தொடங்கியிருப்பது குறித்தும் எடுத்துரைத்தார். நுகர்வோருக்கான பயன்பாட்டில் ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ், எதிர்காலத்துக்கு பயணித்தல், பிளாக்செயின் டெக்னாலஜி போன்றவை குறித்த வொர்க்‌ஷாப், குழு விவாதம் போன்றவை நடத்தப்பட்டன. பார்வையாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமாக விடையளித்தனர். பாசிட்டிவ்நாய்க் அனலைடிக்ஸ் (பி) லிட் நிறுவனத்தின் நிறுவனர் தாமோதரன் பத்மநாபன், பிசினஸ் புத்தாக்க யோசனைகள் குறித்துப் பேசினார். யுகாமர்ஸிலிருக்கும் சட்டச்சிக்கல்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் நப்பின்னை விளக்கிக் கூறினார். இக்கருத்தரங்கில் ஆசிரியர்கள், மாணவர்கள், கார்ப்பரேட் அதிகாரிகள் என முந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.