வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (08/10/2018)

கடைசி தொடர்பு:16:25 (08/10/2018)

`கரையைப் பலப்படுத்தல; 200 ஏக்கர் பயிர் மூழ்கிவிட்டது!’ - அதிகாரிகளைச் சாடும் விவசாயிகள்

தஞ்சாவூர் அருகே கல்லணை கால்வாயின் கிளை ஆறான கல்யாண ஓடை வாய்க்காலின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. `அதிகாரிகளின் மெத்தனமே வாய்க்கால் உடைப்புக்குக் காரணம்’ என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

உடைந்த கால்வாய்

தஞ்சாவூர் அருகே உள்ளது மேல உளூர் கிராமம். கல்லணைக் கால்வாயிலிருந்து வெளியே வரும் பாசன நீர் கண்டிதம்பட்டிலிருந்து கல்யாண ஓடை வாய்க்கால் மூலம் மேல உளூர் வழியாக மதுக்கூர் கடைமடை பகுதியான கல்யாண ஓடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகக் காவிரி டெல்டா பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது. மேலும், கல்லணை அணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் திறக்கும் நீரின் அளவும் அதிகப்படுத்தப்பட்டது. இதனால், ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஏற்கெனவே கல்லணைக் கால்வாய் ஆறுகளின் கரைகள் பலம் இல்லாமல் பல இடங்களில் மணல் மூட்டைகள் கொண்டு பலப்படுத்தப்பட்டன. கல்லணைக் கால்வாயின் கிளை வாய்க்காலான கல்யாண ஓடையிலும் இதே நிலைமையில்தான் இருந்தது. இந்த நிலையில் இன்று மேல உளூர் என்ற இடத்தில் கல்யாண ஓடை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு நடவு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் மூழ்கியது. மேலும், தஞ்சாவூர்- பட்டுக்கோட்டையை இணைக்கும் பிரதான சாலையான மேல உளூரில் சாலையைக் கடந்து தண்ணீர் ஆறுபோல் ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அந்த வழியாகச் செல்லக்கூடிய பஸ் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசினோம். ``கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கடைமடைக்குச் செல்லும் வாய்க்கால்களில் கரைகள் பலம் இல்லாததால் ஒரு மாதத்துக்கு மேல் தண்ணீர் திறக்கபடாமலேயே இருந்தது. இதனால் விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு, நாங்கள் கடன் வாங்கி நடவுப் பணிகள் செய்தோம். இந்த நிலையில் கரைகள் பலம் இல்லாமல் இருப்பது அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். அதை முன்கூட்டியே பலப்படுத்தும் பணியை சரி வரச் செய்யாததோடு தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் திறந்துவிடப்படும் நீரின் அளவையும் அதிகரித்தனர். இதைத் தாங்காமல் கரையில் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு 200 ஏக்கர் நெற்பயிரை மூழ்கடித்து நிற்கிறது நீர். இந்தப் பயிர் மட்டும் தப்பவில்லை என்றால் எங்கள் வாழ்க்கையே மூழ்கிவிடும். எனவே, மூழ்கியுள்ளது பயிர் மட்டுமல்ல. எங்கள் வாழ்க்கையும்தான்'' என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க