வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (08/10/2018)

கடைசி தொடர்பு:16:50 (08/10/2018)

`2014-ல் நடந்ததுபோல் இனி நடக்காது!’ - கடலூரை கண்காணிக்கும் ககன்தீப்சிங்பேடி

கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் ரூ.140 கோடியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. பருவ மழை தொடங்கியதையடுத்து மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளைக் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி, மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தார்.

ககன்தீப்சிங்பேடி

அவர் இன்று காலை கடலூர் பீமாராவ் நகர், சுத்துகுளம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் தொடர்ந்து அவர் சிதம்பரம் அருகே வீரன்கோயில்திட்டு, பெரம்பட்டு,  அகரநல்லூர்,  நந்திமங்கலம்  மற்றும் காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் ஆய்வு நடத்தினார். முன்னதாக அவர் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலூர் மாவட்டம் முழுவதும் வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளேன். கடந்த 2014-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பாதிப்புகள் மீண்டும் வராமல் இருக்கத் தமிழக அரசு ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு
பணிகள் நடந்து வருகிறது. இது இல்லாமல் நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலமும் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகளைப் பார்வையிட்டேன். மீண்டும் இதே இடங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். மழை, வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாய விளை நிலங்கள்  பாதிப்பில்லாமல் எப்படிப் பாதுகாப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வரும் நவம்பர் 30-ம் தேதி இன்ஷூரன்ஸ் தொகை கட்ட வேண்டும். ஆனால், அக்டோபர் 15-ம் தேதிக்குள் இன்ஷூரன்ஸ் தொகை விவசாயிகள் கட்டினால் தற்போது ஏற்படக்கூடிய வட கிழக்குப் பருவ மழையின் நெற்பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் இழப்பீடு தொகை
எளிதாகக் கிடைக்கும். ஆகையால், விவசாயிகள் உடனடியாக இன்ஷூரன்ஸ் தொகை கட்ட வேண்டும். கடந்த 2014 மற்றும் 
2017-ம் ஆண்டு இந்திய அளவில் தமிழக விவசாயிகள் அதிக பயிர் இழப்பீடு, தொகை பெற்று பயனடைந்தனர்'' என்று கூறினார்.