வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (08/10/2018)

கடைசி தொடர்பு:17:09 (08/10/2018)

`பாட்ஷா’ படம்போல நண்பனுக்காகத் துப்பாக்கியைத் தூக்கிய திண்டுக்கல் மோகன்ராம்! - மும்பையில் சிக்கிய பின்னணி

பாட்ஷா படத்தைப் போல நண்பனுக்காக ரவுடியான மோகன்ராம்

`பாட்ஷா’ படத்தில் நண்பனுக்காக ரஜினி, வில்லன் ரகுவரனை பழிவாங்குவார். அதைப்போல நண்பனுக்காக ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் திண்டுக்கல் மோகன்ராம் கோலோச்சியதாக போலீஸார் தெரிவித்தனர். 

திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடியான துப்பாக்கி மோகன்ராம், கடந்த 4 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார். 2016-ல் கோவை புறநகர் பகுதியில் நடந்த மூன்று பேர் கொலை வழக்கில் தேடப்பட்ட மோகன்ராமை கோவை தனிப்படை போலீஸார் மும்பையில் பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
  
யார் இந்த மோகன்ராம்?

திண்டுக்கல், சின்னாளம்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராம். பட்டதாரி. இவரின் தந்தை அரசு பஸ் டிரைவர். மோகன்ராமும்  என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட திண்டுக்கல் பாண்டியின் தம்பி நாகராஜனும் நெருங்கிய நண்பர்கள். மோகன்ராம் கண்முன், நாகராஜனை கொலை செய்தது ரவுடி கரடிமணி டீம். நண்பனை இழந்த திண்டுக்கல் மோகன்ராம், பாட்ஷா படத்தில் ரஜினியைப்போல சபதம் போட்டு ரவுடியானார். திண்டுக்கல் பாண்டியனுடன் சேர்ந்து கரடி மணிக்கு எதிராக அரிவாளைத் தூக்கினார் மோகன்ராம். அடுத்தடுத்த வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் மோகன்ராமின் பெயர் இடம்பிடித்தது. நாட்டு துப்பாக்கிகளைத் தயாரிப்பதில் கெட்டிக்காரர் மோகன்ராம் என்கின்றனர் போலீஸார். அதுவும் பேனா வடிவத்தில் துப்பாக்கியைத் தயாரித்து அதன்மூலம் கொலைகளைச் செய்துள்ளார். சென்னை அமைந்தகரையில் சிக்கிய பேனா ரகத் துப்பாக்கி வழக்கில் மோகன்ராம் சிக்கினார். திண்டுக்கல் பாண்டியை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்த பிறகு, அந்த டீமுக்கு தலைவரானார் மோகன்ராம். 2011-ல் போலீஸாரிடம் சிக்கிய மோகன்ராம், 2014 மே மாதத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியரைக் கொலைச் செய்ய வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடித்ததில் அவர் படுகாயமடைந்தார். அப்போது போலீஸாரிடம் சிக்கிய அவர், ஜாமீனில் வெளிவந்த பிறகு தலைமறைவாகினார். 

இந்தச் சமயத்தில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் பழிக்குப்பழியாக மகாதேவன், தியாகு, அருண் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 21 பேரை சூலூர் போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மோகன்ராமை போலீஸார் தேடி வந்தனர். அவரின் கூட்டாளிகள் போலீஸாரிடம் சிக்கிய பிறகும் மோகன்ராம் மட்டும் போலீஸாரிடம் பிடிபடாமல் தண்ணிக்காட்டி வந்தார். இந்தநிலையில்தான் அவரை மும்பையில் கோவை தனிப்படை போலீஸார் பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவலை கோவை மாவட்டப் போலீஸ் உயரதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பிரபல ரவுடியான மோகன்ராம், கடந்த 4 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார். அவர் மீது திண்டுக்கல், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டபிறகும் தலைமறைவாக இருந்த மோகன்ராமைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது, மோகன்ராம் மும்பையில் பதுங்கியிருப்பதாக எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று அவரைப் பிடித்துள்ளோம். மும்பையிலிருந்து கோவைக்கு அவரை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர். 

மோகன்ராம், களத்தில் இறங்கி காரியத்தை முடிப்பார். எப்போதும் அவரிடம் துப்பாக்கி இருக்கும். இதனால், அவரைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீஸாரும் மோகன்ராமை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கவும் தயாராகத்தான் இருந்தனர். ஆனால், போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றபோது துப்பாக்கியால் அவர் சுட முயன்றதாகவும் அப்போது போலீஸார் துப்பாக்கியால் எச்சரித்ததால் சரண் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.