வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (08/10/2018)

கடைசி தொடர்பு:18:40 (08/10/2018)

சாதிப் பெயரை சொல்லித் திட்டிய தலைமையாசிரியர்! - கொந்தளித்த மாணவர்களின் பெற்றோர் மறியல்

மாணவ, மாணவிகளைத் தரக்குறைவாக சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

                                        

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர் குளோரியா. இவர் கடந்த மூன்று மாதமாக மாணவ-மாணவிகள் ஒரு சமூகத்தினரை மட்டும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டி தகாத வார்த்தைகளால் பேசிவந்துள்ளார். இதுகுறித்து மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். 

                                

இந்த நிலையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளியை விட்டு அழைத்துச் சென்று பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெற்றோர்கள், எங்கள் பிள்ளைகளை தலைமையாசிரியர் குளோரியா தொடர்ந்து சாதிப் பெயரை சொல்லித் தரக்குறைவாக பேசிவருகிறார். நாங்கள் பட்டியலின சாதியில் பிறந்தது தவறா. இவர் தரக்குறைவாக பேசியதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறி மறியலைக் கைவிட மறுத்தனர். 

                                 

பின்பு காவல்துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர் திலகவதி, மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் செந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு ஜெயங்கொண்டம் - செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.