வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (08/10/2018)

கடைசி தொடர்பு:18:18 (08/10/2018)

``மீண்டும் ராஜபக்‌சே?’’ பதறும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

``ராஜபக்சே ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சம் ஈழத்தமிழ் மக்களிடம் உள்ளது!"

``மீண்டும் ராஜபக்‌சே?’’ பதறும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

``ராஜபக்‌சே (இலங்கை முன்னாள் அதிபர்) ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சம் ஈழத்தமிழ் மக்களிடம் உள்ளது என்ற தகவலையும், ஈழத்தமிழ் மக்களின் தற்போதைய பிரச்னைகள் என்னவென்பது பற்றியும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துச் சொன்னேன்'' என்று வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

சமீபத்தில் இலங்கையில் சுற்றுப் பயணம் சென்று அங்குள்ள தமிழர் அமைப்புகளின் தலைவர்கள், தமிழ் மக்களிடம் உரையாடி அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு வந்திருக்கும், மூத்த அரசியல்வாதியும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலையைத் தெரிவித்தார். 

இதுபற்றி நம்மிடம் பேசியவர், ``கழகத் தலைவரைச் சந்தித்து, எனது ஆறு நாள் இலங்கைப் பயணம் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். அதை அக்கறையுடனும் ஆர்வத்துடனும் கேட்டறிந்தார். இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைத் திரிகோணமலையிலும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்திலும் சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த கருத்துகளை எடுத்துக் கூறினேன். 

ராஜபக்‌ஷே குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இலங்கையில் இன்றைக்கு முக்கியமாகச் செய்ய வேண்டியது தமிழர்களைக் குடியமர்த்தவும், சிங்களவர்களிடமிருக்கும் விவசாய நிலங்களைத் தமிழ் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும், இறுதிப்போரில் கைதானவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கவும், போரின்போது காணாமல் போனவர்களைக் கண்டறியவும், போரில் மரணமடைந்தவர்களின் மனைவியர், உறவினர்களுக்கு மறுவாழ்வு பேணுவது போன்ற முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க மற்றும் டெசோவின் நிலைப்பாடாகும். அத்தோடு இறுதிப்போரில் இன அழிப்பு நடந்ததையும் அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தவும் இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்குப் பொது வாக்கெடுப்பு நடத்தவும் நம்முடைய நிலைப்பாடுகள் இதுதானே என்றும் அவரிடம் விளக்கினேன். இந்த இரண்டும் ஐ.நா-வின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். இந்தப் பிரச்னைகளில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திரிகோணமலை ஆகிய இடங்களில் நடந்த கூட்டங்களில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணக் குழு உறுப்பினர்கள், உள்ளூர் ஊராட்சி உறுப்பினர்கள் மத்தியில் நான் பேசும்போது, தலைவர் கலைஞருடைய முயற்சியில் தாங்கள் ஐ.நா மன்றத்திலும், ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும்  உரையாற்றியதை எடுத்துரைத்தேன். 

இதையெல்லாம் கேட்டுவிட்டு கழகத் தலைவர், இன்றைக்குக்கூட இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, போரில் கைப்பற்றப்பட்ட நிலங்களில் சில ஏக்கர்களைத் தமிழர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது பற்றி நாளிதழில் படித்ததாகக் கூறினார். அவர் இந்தப் பிரச்னையில் எவ்வளவு அக்கறையோடு இருப்பதைக் கண்டு வியந்தேன். இன்றைக்கு ஈழப்பகுதியில் உள்ள தமிழர்கள், 'நீங்களும் கழகமும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால்தான் தங்களுக்குப் பரிகாரம் கிடைக்கும்' என்று தங்களிடம் கூறும்படி என்னிடம் சொன்னார்கள். அவர்கள், நம்பிக்கையோடு உள்ளனர் என்றும் தலைவரிடம் குறிப்பிட்டேன்.

மீண்டும் ராஜபக்‌சே ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் உள்ளது என்றும் சொன்னேன். `அப்படி வந்தால் தமிழகத்துக்குக் கேடாகிவிடுமே' என்றார். இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் இந்திய அரசு கவனிக்க வேண்டும் என்று கூறியதையும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை வரும்போது சந்திக்க விரும்புவதையும் அவரிடம் கூறியபோது, `வரட்டும். கண்டிப்பாகச் சந்திக்கிறேன்' என்றார். மேலும், கொழும்பு நகரில் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் நானும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் கலந்துகொண்டதைத் தெரியப்படுத்தினேன். என்னுடைய ஈழப்பயணம் பற்றிய பல செய்திகளைச் சொன்னபோது பொறுமையோடு கழகத்தலைவர் உள்வாங்கிக்கொண்டார்'' என்றார் புன்னகையுடன்.

ஈழத்தமிழர்கள் வாழ்வு இனிமேலாவது பிரகாசிக்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்