வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (08/10/2018)

கடைசி தொடர்பு:19:40 (08/10/2018)

அவசரத்துக்குச் செல்ல வழியில்லை! - மழையால் நிரம்பிய சுரங்கப்பாதையால் பொங்கிய பொதுமக்கள்

2 நாள் பெய்த மழைக்கே ஊருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் ஆளில்லாத ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை சமீபத்தில் அமைத்திருந்தது. நேற்றும் இன்றும் காலையில் ராமநாதபுரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதையில் 5 அடி மட்டத்துக்கு மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் உட்பட எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக லாந்தை, கண்ணந்தை, சின்னத்தாமரைக்குடி, பெரியதாமரைக்குடி, திருப்பண்ணை உள்ளிட்ட கிராமத்து மக்கள் அவசரத் தேவைக்குக்கூட ரயில்வே சுரங்கப்பாதையைப் பயன்படுத்த முடியவில்லை. இதையடுத்து சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாற்றுப்பாதை அமைத்துத் தர வலியுறுத்தியும் இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக வந்த அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்தனர்.

சாலை மறியல் செய்தவர்களை சமாதானம் செய்த ஆட்சியர்
 

தகவலறிந்து ராமநாதபுரம் டி.எஸ்.பி நடராஜன் தலைமையிலான போலீஸார், வட்டாட்சியர் சாந்தி, துணை வட்டாட்சியர் மாதவன் ஆகியோர் அங்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாற்றுப்பாதை அமைத்துத் தரும்வரை சாலை மறியலைக் கைவிட மாட்டோம் எனவும் கூறி மறியலில் ஈடுபட்டதால் 5 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருஉத்தரகோசமங்கை சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் சாலை மறியல் செய்தவர்களிடம் சுரங்கப்பாதை பகுதியிலிருக்கும் மழைநீரை அப்புறப்படுத்தவும் பொதுமக்கள் சென்று வர போதிய வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.