வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (08/10/2018)

`தாயின் பிரிவைத் தாங்க முடியவில்லை!’ - தற்கொலை செய்துகொண்ட சேலம் கல்லூரி மாணவர்

பாப்பாத்தி

தாயின் மரணத்தைத் தாங்க முடியாமல் தனிமையில் தவித்து வந்த கல்லூரி மாணவர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது. சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கொண்டலாம்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நல்லதம்பி - பாப்பாத்தி. இருவரும் கூலித் தொழில் செய்து வந்தார்கள். இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும் சுசிலா, கோகிலா என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். சக்திவேல், பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சுசிலா, கோகிலா ஆகிய இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாப்பாத்திக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததால் கடந்த ஒரு வருடமாகத் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இவரை இவருடைய மகன் சக்திவேல் மிகவும் பாசமாகவும் பரிவாகவும் கனிவாகவும் கவனித்து வந்தார். ஆனாலும், சிகிச்சைப் பலனின்றி 7 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அம்மாவின் மரணத்தைத் தாக்கிக்கொள்ள முடியாமல் தவித்து வந்தார். அம்மாவின் நினைவலைகள் தன்னை வாட்டுவதாக நண்பர்களிடம் கூறிக்கொண்டு இரண்டு முறைக்கு மேல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து முயன்றுள்ளார். தந்தை நல்லதம்பியும் உறவினர்களும் காப்பாற்றினார்கள்.

இந்தநிலையில் நேற்று தந்தை நல்லதம்பி கூலி வேலைக்குச் சென்ற பிறகு, சக்திவேல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
யாருக்கும் தெரியாமல் விஷம் வாங்கி வந்து வீட்டுக்குள் அருந்திவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே சக்திவேல் உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். பின்னர், அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.