வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (08/10/2018)

கடைசி தொடர்பு:20:40 (08/10/2018)

`பேராசியர்களை வேறு கல்லூரிகளுக்குத் தற்காலிகமாக மாற்றுவதா?' - கொதிக்கும் சேலம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள்

சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் பேராசியர்களுக்குத் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றுப்பணி கொடுக்கப்படுவதற்கு மாணவர் மதியழகன்மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கைக் கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மாணவர்கள் வந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும், பேராசியர்களுக்கு மாற்றுப்பணி கொடுக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி அரசுக் கலைக்கல்லூரியில் பொருளியல் படிக்கும் மாணவன் மதியழகனிடம் பேசினோம். ``எங்கக் கல்லூரியில் இருந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் சீனிவாசன் பாலக்கோட்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஆங்கிலத்துறைப் பேராசிரியர் சண்முகவேல், காரியமங்கலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பொருளாதாரப் பிரிவுப் பேராசிரியர் செந்தில்குமார், அரியலூருக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இப்படி, உதவி பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பதவிகளில் உள்ள 9 பேரை வேவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றுப்பணி திட்டமாக அனுப்பி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு 3 பேராசிரியர்களை மாற்றுப் பணிக்காக வேவ்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதனால் எங்களுக்கு பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லாததாலும் புதியவர்கள் வந்து நடத்தும்போது முதலிலிருந்து மீண்டும் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாலும் எங்களுடைய படிப்பு பாதிக்கப்படுகிறது. ஏற்கெனவே கல்லூரியில் 84 கெளரவ விரிவுரையாளர்கள் இருக்கும்போது மேலும் 12 பேருக்கு மாற்றுப்பணி கொடுத்திருப்பதால், கல்லூரியில் 96 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. தற்போது மாற்றப்பட்ட 9 பேராசிரியர்களும் மாணவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனால், கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாகப் பேராசிரியர்களை வேறு இடத்துக்கு மாற்றுப்பணிக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். மீண்டும் அதே பேராசிரியர்கள் வந்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டும்'' என்றார்கள்.