வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (08/10/2018)

கடைசி தொடர்பு:21:25 (08/10/2018)

"அரசியல் கட்சிகள் அணுகினால் டெல்லியில் பேசுவேன்!" - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!

"மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும்" என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் கடந்த 6-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, அந்த மாநிலங்களில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததுடன், தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அந்த மாநிலத் தேர்தல்களோடு தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் (ஏ.கே.போஸ் மரணமடைந்ததை அடுத்து), திருவாரூர் (முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததையடுத்து) தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், 'மழை காரணமாகத் தமிழகத்துக்குத் தற்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம்' என்று கடிதம் எழுதியதைத் தொடர்ந்தே, அந்தத் தொகுதிகளுக்குத் தற்போது தேர்தல் அறிவிக்கவில்லை" என்று ஓம்பிரகாஷ் ராவத் தெரிவித்தார். 

தேர்தல் ஆணையம் - தமிழக  அரசு  கடிதம்

திருப்பரங்குன்றம் இடைத்தோதல் தொடர்பாக, கடந்த 4-ம் தேதி மதுரையில், அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க-வை வெற்றிபெற வைப்பதற்கான வியூகம் குறித்துப் பேசியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர். இதற்கிடையே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு, அரசியல் களத்தில் அனலை மூட்டியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க... மறுபுறம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்தே தேர்தல் ஆணையத்துக்குத் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதாகக் குற்றம்சாட்டும் எழுந்துள்ளது.

"தமிழக அரசின் கடிதத்தை ஏற்று, தேர்தல் ஆணையம் இப்படியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதா" என முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.  "தலைமைச் செயலாளரின் கடிதத்தை ஏற்றுத் தேர்தலை ரத்துசெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக, தேர்தல் நடத்துவது குறித்து தமிழக அரசிடம் கருத்து கேட்கப்படுவது வழக்கமான மரபுதான். அந்த சத்யபிரத சாகு  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிஅடிப்படையில், தமிழகத்தில் உள்ள சூழல் குறித்து தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்கும்போது அவர்கள் தெரிவிக்கும் தகவலையடுத்து, இதுபோன்று தேர்தலை ரத்துசெய்வதற்கான வாயப்புள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்களுடைய ஆதாயத்துக்காகப் பேசுவதையெல்லாம் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளாது. ஆதாரப்பூர்வமாகத் தேர்தல் நடத்துவதற்கான சூழலை உறுதிசெய்தால் மேற்கொண்டு ஆலோசனை செய்து அதன்பிறகு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது" என்றார், மிகவும் தெளிவாக.

இதுகுறித்து தற்போதைய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதாப் சாகுவிடம் பேசினோம். "'தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்தே இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் இல்லை' என்று ஆணையரே தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தமிழக அரசு என்னுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை; எந்த அரசியல் கட்சிகளும் எங்களைத் தொடர்புகொண்டு பேசவில்லை; இங்குள்ள சூழல் குறித்தும் மத்திய தேர்தல் ஆணையர் இதுவரை என்னிடம் கேட்கவில்லை. அந்த இரண்டு தொகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மட்டும் ஏற்கெனவே மத்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு ஏற்றச் சூழலின் நிலை குறித்து, நான் இதுவரை மத்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் எதுவும் பேசவில்லை. ஒருவேளை, அதுகுறித்து பேச அழைத்தால்... இங்குள்ள சூழல் குறித்துத் தெரிவிப்பேன். மேலும், அரசியல் கட்சிகள் இதுகுறித்து மனுக் கொடுத்தால் அதன் பிறகே மத்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தைத் தொடர்புகொண்டு பேச முடியும்" என்றார், நிதானமாக.

இடைத்தேர்தலைத் தமிழக அரசு நடத்தத் தயங்குவது எதற்கோ?


டிரெண்டிங் @ விகடன்