வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (08/10/2018)

கடைசி தொடர்பு:21:20 (08/10/2018)

7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.

பேரறிவாளன் விடுதலைக்காக அஞ்சல் அட்டை அனுப்பிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் விதிக்கப்பட்ட  தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய உள்ளதாகத் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு எதிராக மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்குத் தடை இல்லை எனவும் ஆளுநரிடம் பரிந்துரை செய்து விடுதலை செய்யலாம் எனவும் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அமைச்சரவைக் கூடி 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இது தொடர்பாக ஆளுநர் தனது முடிவை அறிவிக்காததால் 7 பேரும் தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர். 
இந்நிலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரும் உத்தரவில் கையெழுத்திட வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைத்தனர். தென்மண்டல இளைஞரணி செயலாளர் செரோன்குமார் தலைமையில் அக்கட்சியினர் விடுதலை கோரும் அஞ்சல் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.