வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (08/10/2018)

கடைசி தொடர்பு:22:08 (08/10/2018)

`ஹரிணி பாப்பாவைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு!" - கரூர் தன்னார்வலர்கள் அறிவிப்பு

       சிறுமி ஹரிணி        

விகடன் இணையதள வாசகர்களுக்கு ஹரிணி பாப்பாவை மறந்திருக்க வாய்ப்பில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மானாமதி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியின் மகள்தான் ஹரிணி. நாடோடி இன தம்பதிகளான இவர்கள், பாசி மணி, ஊசிமணி விற்கப்போன இடத்தில் ஹரிணியைப் பறிகொடுத்துவிட்டு ஒரு மாதமாகக் கதறிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், "இந்த அப்பாவி தம்பதியின் இரண்டு வயது மகள் ஹரிணியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறோம்" என்று அறிவித்து, இந்தத் தம்பதிக்குப் பேருதவி செய்ய இருக்கிறது கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற அமைப்பு.

சிறுமி ஹரிணி

இந்தத் தம்பதி, தங்கள் மகள் ஹரிணியோடு கடப்பாக்கம் அருகே உள்ள இடைக்கழிநாடு கிராமத்தில் நடந்த அம்மன் கோயில் திருவிழாவுக்கு பொருள்களை விற்கச் சென்றிருக்கிறார்கள். திருவிழா முடிந்ததும் ஆட்டோவில் ஊருக்குக் கிளம்பி இருக்கிறார்கள். அப்போது அவர்கள் பயணித்த ஆட்டோவின் ஹெட்லைட்டில் பிரச்னை ஏற்படவே, அங்கே உள்ள காவல் நிலையத்தின் முன்பே குடும்பமே உறங்கி இருக்கிறது. காலையில் எழுந்து பார்த்தபோது, ஹரிணி மாயமாகி இருக்கிறாள். கண்ணீருடன் அல்லாடியபடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தகவலைக் கடந்த மாதம் 23-ம் தேதி விகடன் இணையதளத்தில், "புள்ள கிடைக்கலன்னா போலீஸ் ஸ்டேஷன்லயே செத்துடுவோம்" - கலங்கும் நாடோடி பெற்றோர்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஒரு மாதம் கடந்தும் காவல்துறை ஹரிணியைக் கண்டுபிடிக்கவில்லை. இதனால், அந்தத் தம்பதிக்கு அவஸ்தை கூடியது. அதையும் கடந்த 6-ம் தேதி ஒரு மாதம் ஆகியும் கண்டிபிடிக்கப்படாத ஹரிணி பாப்பா... கதறும் நாடோடி பெற்றோர்! என்ற தலைப்பில் ஃபாலோஅப் செய்தியாக பதிந்திருந்தோம். இந்தச் செய்தியைப் படித்து, வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியின் அல்லலைத் துடைக்க, "ஹரிணியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு!" என்று அறிவித்து இந்தத் தம்பதிக்கு தெம்பூட்டி இருக்கிறது `இணைந்த கைகள்’ அமைப்பு. 


 சலீம்அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சலீமிடம் இதுகுறித்துப் பேசினோம். "நாங்க இளைஞர்கள் 11 பேர் சேர்ந்து ஒன்றிணைந்து சமூக வலைதளங்கள் மூலமா நிதி திரட்டி ஏழ்மை நிலையில் உள்ள இதய, மூளை பிரச்னைகளில் சிக்கிய சிறுமிகள், இளைஞர்களுக்கு ஆபரேஷன் பண்ணி, அவர்களை சரியாக்கி இருக்கிறோம். இந்த நிலையில்தான், வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதி, தங்கள் மகள் ஹரிணியை இழந்து தவிக்கும் அவலத்தை விகடன் இணைதளத்தில் படித்தோம். பிள்ளையை இழந்து வாடும் அவர்களின் துயரைத் துடைக்க நாங்க முயன்றோம். அந்தக் குழந்தை பற்றிய தகவலை, சமூக வலைதளங்களிலும் பதிந்து இருக்கிறோம். அதோடு, 'இந்த விசயத்தைப் படிப்பவர்களை ஹரிணியைக் சீரியஸாகத் தேட வைக்க என்ன பண்ணலாம்'ன்னு யோசிச்சோம். அப்போதான், `ஹரிணியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு எங்க அமைப்பு சார்பில் ஒரு லட்ச ரூபாய் பரிசு தர்றதா அறிவிக்கலாம்'ன்னு தோணுச்சு.

வெங்கடேசனிடம் பேசி இந்தத் தகவலைச் சொல்லிவிட்டோம். எங்க அமைப்பில் உள்ளவர்களோடு நாளை மறுநாள் போய், அந்தத் தம்பதியைப் பார்க்க இருக்கிறோம். அதன் பிறகு, இந்தத் தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் என்று எல்லா வகையான சமூக வலைதளங்களிலும் பதிவா போட இருக்கிறோம். தமிழில் மட்டுமல்லாது, இந்தி, ஆங்கிலம், அரபின்னு 4 மொழிகளில் பதிவைப் போட இருக்கிறோம். அதோடு,முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் மூலம் இதை லைவ் செய்ய இருக்கிறோம். எப்படியாவது ஹரிணியை மீட்டுக் கொடுத்து, அந்த நாடோடித் தம்பதியின் சோகத்தைத் துடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கண்டிப்பா ஹரிணி பாப்பா கிடைப்பா" என்றார்.