வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:00:00 (09/10/2018)

பட்டா வழங்க கோரி 38 ஆண்டுகால போராட்டம்! - பட்டியலின மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய சி.பி.எம்

38 ஆண்டுகளாக அரசு வழங்கிய இடத்துக்கு, பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பட்டியலின மக்களுக்கு ஆதரவாக சி.பி.எம் கட்சி நிர்வாகிளும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

பட்டியலின மக்கள்


இது குறித்து இளையான்குடி சி.பி.எம் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி பேசும் போது,"சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா பெருமச்சேரி கிராமத்தில் நிலம் எடுப்பு சட்டத்தின் படி அரசு, நிலத்தை கையகப்படுத்தி 1980 ம் ஆண்டு பட்டியலின மக்களுக்கு  தலா மூன்று செண்ட் வீதம், சுமார் இருபது குடும்பங்களுக்கு வழங்கியது. அந்த இடத்தில் குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தவர்களின் வாழ்க்கை இதனால் சீரழிந்தது. 1992-ம் ஆண்டு சாதிக்கலவரம், ஆதிக்க சாதிக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட பட்டியலின மக்கள். சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் குடிசை போட வந்த போது அந்த குடிசைகளை தீ வைத்து கொளுத்திவிட்டார்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்ட  மக்கள் இளையான்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், காவல்துறை ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.

இளையான்குடி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், பட்டியலின மக்களுக்கு நிலம் கொடுத்தது சரியே; அந்த இடத்தில் தனியார் யாரும் உள்ளே நுழையக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள்  போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவருக்கு  ஆதரவாக இருக்கிறார்கள். 38 ஆண்டுகளாக  அரசு வழங்கிய இடத்திற்கு இன்னும் பட்டா வழங்காத கொடுமை நடக்கிறது. இந்த மக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். மாவட்ட ஆட்சியரும் இன்னும் சில நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். இந்த  மக்களுக்கு பட்டா வழங்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க