வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:01:00 (09/10/2018)

ஓரங்கட்டப்படுவதாக புகார்!- அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து தி.மு.கவில் இணைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்

ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி தினகரனை சந்தித்த விவகாரம் அ.தி.மு.கவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்டுறவு சங்க தேர்தலில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்டுக்கோட்டையில், பால்வள கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பதவி, ஓ.பி.எஸ் ஆதரவாளரான மயில்வாகனன் என்பவருக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டதால்,  அதிருப்தியடைந்த அவர், அ.தி.மு.கவிலிருந்து  விலகி தி.மு.கவில் இணைந்துள்ளார்.

தி.மு.க

ஓ.பி.எஸ்-சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி கொண்டிருந்த நேரத்தில்,  அ.தி.மு.கவில் அதிருப்தியில் இருந்த பலர் ஓ.பி.எஸ் பக்கம் சென்றனர். தஞ்சாவூரில் தர்மயுத்த  மாநாடு  நடத்திய போது, அதற்கு பெரிய அளவில் பலர் ஏற்பாடு செய்தனர். அதில் ஒருவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த மயில்வாகனன். ஓ.பி.எஸ்- தினகரன் சந்திப்பு குறித்து வெளியான தகவல் கட்சியில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது.இதன் எதிரொலியாக, முற்றிலுமாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக சலசலப்பு எழுந்துள்ளது. அதன்படி, கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர் தேர்ந்தெடுக்கும் பணிகள் அ.தி.மு.கவில் நடைப்பெற்றது. இதில் பட்டுகோட்டை பால்வள உற்ப்பத்தியாளர்கள் சங்கத்திற்கான தலைவர் பதவியை கடந்த முறை அதே பொறுப்பில் இருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளரான மயில்வாகனன் கேட்டார். ஆனால் முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் அந்த பதவியை நகர செயலாளரான சுபராஜ் என்பவருக்கு பரிந்துரை செய்ததோடு அவருக்கே தலைவர் பதவியை கொடுத்து விட்டார். இதனால் விரக்தியடைந்த மயில்வாகனன் இன்று மாலை அ.தி.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் சேர்ந்து விட்டார்.

மயில் வாகனன்

இது குறித்து சிலரிடம் பேசினோம். அவர், ``அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு மரியாதை இல்லை.ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவரை வரவேற்று பிளக்ஸ் வைத்ததுடன், ஆதரவாக செயல்பட்டார் என்பதற்காக மயில்வாகனனுக்கு பால்வள சங்கத்தின் தலைவர் பதவி கொடுக்கப்படவில்லை.அதனால் அவர் தி.மு.கவில் சேர்ந்து விட்டார். மேலும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவதால், இன்னும் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர் அதோடு பட்டுக்கோட்டை எம்.எ.ல்.ஏ, சிவி.சேகர் தான் சார்ந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கே,முக்கிய பதவி பெற்று தரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் இதனாலும் பலர் வெறுப்பில் உள்ளனர். எனவே இன்னும் பலர் சீக்கிரமே அ.தி.மு.கவிலிருந்து விலகி வெளியே வருவதற்கு தயாராகி வருகின்றார்கள்''  என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க