வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:02:00 (09/10/2018)

``ஆட்சியை கவிழ்த்து எனக்கு பொறுப்பு வழங்குவதாக ஓ.பி.எஸ் கூறினார்'' - டி.டி.வி.தினகரன்

"18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்புக்கு பிறகு,  இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நாம் அரியணை ஏறுவோம்" என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

 

 டி.டி.வி.தினகரன்

முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற கழகத்தின்  அமைப்புச் செயலாளருமான செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 'தனது தொகுதியான அரவக்குறிச்சியில், இந்த அரசு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை' என்று குற்றம்சாட்டிய அவர், மூன்று இடங்களில் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை படியேறி அனுமதி வாங்கி வந்தார். அதன்படி, பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளைத் தொடர்ந்து, இறுதியாக வேலாயுதம்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "கடந்த வருடம் ஜூலை 22 ம் தேதி  தெரிந்த நண்பர் மூலம் தர்மயுத்தம் நடத்திய மனிதர் என்னிடம் பேசினார். 'நான் தவறு செய்துவிட்டேன். நாம் இந்த எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்'ன்னு பேசினார். ஆனால்,இப்போது அவரோடு ஒட்டி உறவாடி ஆட்சியை நடத்துதுகிறார். அதே தர்மயுத்தர் மறுபடியும் கடந்த மாதம் இறுதியில், அதே பழைய தூது வந்த நண்பர் மூலம் என்னிடம் பேசினார். 'இந்த ஆட்சியை சேர்ந்து அகற்றுவோம். பிறகு உங்களுக்கு உயர் பொறுப்பு கிடைக்க வழி செய்கிறேன்' என்றார். இவர் என்ன சொல்வது?. 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வரட்டும்.

அப்போது, இந்த ஆட்சியாளர்கள் தானாக வீட்டுக்கு போவார்கள். 'அம்மா ஆட்சி; மக்கள் ஆட்சி நடத்துகிறோம்'ன்னு சொல்ற இவங்க,சொந்தகாரங்களுக்காகவும், மாமன், மச்சான், உறவினர்களுக்காகவும் ஆட்சி நடத்துறாங்க. சில மாதங்களில் இவர்கள் ஆட்சி கவிழ்ந்துவிடும். அப்போது, நாம் அம்மா வழியில் ஏழை,எளிய மக்களுக்கான ஆட்சியை நடத்துவோம். இந்த அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டுமல்ல, 234 தொகுதிகளுக்கும் செய்றதா ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்துற ஆட்சியை நாம் நடத்துவோம். விவசாயிகளின் பிரச்னையை தீர்க்குற, சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகளை அமைக்கிற, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிற, நீட் உள்ளிட்ட ஏழை,கிராம மாணவர்களின் உயர்கல்வியை பாதிக்கிற விசயங்களை ஜெயலலிதா வழியில் எதிர்க்கிற அரசாக நாம் நடத்தும் ஆட்சி இருக்கும்" என்றார்.