வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:08:10 (09/10/2018)

கூட்டுறவு சங்கத் தேர்தல் - அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருப்பூர் எம்.எல்.ஏ-க்கள்!

திருப்பூரில், கூட்டுறவு விற்பனை சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுவில், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களே அங்கு சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கூட்டுறவு சங்க தேர்தல்

திருப்பூர் - பல்லடம் சாலையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இயங்கிவருகிறது. 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய, இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட 11 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த 6 -ம் தேதியன்று  பெறப்பட்டது. மொத்தம் 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 5 - பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பின்னர், 14 பேரின் வேட்புமனுக்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டு, வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நேற்று மாலை கூட்டுறவு விற்பனை சங்க அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது. அப்போது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் வேட்புமனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்று அதிகாரிகளிடம், அக்கட்சியினர் கேட்டனர். அதற்கு, "முன்மொழிவு பத்திரத்தில் தவறு இருந்ததால், நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

ஆனால் அங்கு வந்திருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த திருப்பூர் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன் மற்றும் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் ஆகியோர்," தேர்தல் அலுவலர்கள் வேட்புமனுவை முறையான பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்றும், அதை விசாரிக்க வந்த எங்களுக்கு தேர்தல் அலுவலர் மோசஸ் முறையான பதிலும் அளிக்காமல், அங்கிருந்து சென்றுவிட்டார்" என்றும் கூறி, அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தேர்தல் அலுவலர் மோசஸ் மீது முறைகேடாக செயல்பட்டதாகப் புகார் அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். ஆனால், இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டப்பட்டபோது, அதில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால்தான் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரே, அந்தப் பட்டியலை எடுத்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கிறார்கள், வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் மற்ற கட்சியைச் சேர்ந்த ஆட்கள்.

காவலாளி நாராயணன்

இப்படியாக வாக்குவாதம் தொடர்ந்து முற்றியிருந்த நிலையில், அலுவலகத்தின் பணிநேரம் முடிந்துவிட்டதாகக் கூறி அலுவலகத்தைப் பூட்டுவதற்காக உள்ளே நுழைந்தார் கூட்டுறவு சங்கத்தின் காவலாளி நாராயணன். அப்போது, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுடன் வந்திருந்த சிலர், அந்தக் காவலாளியை மதுபோதையில் இருப்பதாகக் கூறி உள்ளே இழுத்துச்சென்று, சரமாரியாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தால் கூட்டுறவு சங்க அலுவலகமே சிறிது நேரம் பரபரப்பில் மூழ்கியது. மேலும், கூட்டுறவு சங்கத் தேர்தல் சரியான முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் மற்ற கட்சியினரிடையே எழுந்துள்ளது.