வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:12:07 (09/10/2018)

8 வழிச் சாலை வழக்கு - அரசு வழக்கறிஞர்கள்மீது கடுகடுத்த நீதிபதிகள்!

'8 வழிச் சாலை வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞர்களைப் பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா...' என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை - சேலம் இடையேயான பசுமைவழிச் சாலை திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி பா.ம.க எம்.பி., அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் எனப்  பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், நேற்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்திட்டத்துக்காக தருமபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டதுகுறித்து அரசுத் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆனால், அதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை என்றும் பதிலளிக்க கால அவகாசம் அளிக்கக் கோரி, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ``வழக்குகுறித்த தகவல் இல்லை என்றால் நீதிமன்ற அறைக்கு வரவேண்டாம்' எனக் காட்டமாகத் தெரிவித்தனர். மேலும், ``8 வழிச் சாலை வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞர்களைப் பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா?'' இந்த வழக்கில், ஆரம்பத்திலிருந்தே அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாகச் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்தனர். 

சமீபத்தில் (எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு), சென்னை முழுவதும் வைக்கப்பட்ட பேனரில் அரசு வழக்கறிஞர்  ஒருவரின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவை அரசு வழக்கறிஞரே மீறுவதை ஏற்க முடியாது எனவும் அதிருப்தி தெரிவித்தனர். 'நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு ஒரு மரியாதை உள்ளது. அதைக் கெடுக்கும் விதத்தில் செயல்பட வேண்டாம்' என அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.