வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:10:11 (09/10/2018)

'நம் வைகையைக் காப்போம்' – மாணவர்களுக்கு ஆவணப்படம் திரையிட்டுக்காட்டிய வனத்துறை!

வன உயிரின வார விழாவின் இறுதி நாளான நேற்று, ”நம் வைகையைக் காப்போம்” என்ற ஆவணப்படம் மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.

இந்தியா முழுவதும் அக்டோபர் மாதம் 2-ம் தேதியில் இருந்து 8-ம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தேனி மாவட்டம் லெட்சுமிபுரம் அருகே உள்ள ரேணுகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், நேற்று மாலை வனத்துறையின் சார்பாக காட்டுயிரி வார விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு “நம் வைகையைக் காப்போம்” என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. காலையில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட வன அலுவலகம் வரை மாணவர்கள், வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்ட விழிப்பு உணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் கெளதம், வனக்கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், மாநில காட்டுயிரி வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர். வன உயிரின வார விழாவின் இறுதி நாளில் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அவசியத்தையும், வைகை ஆற்றின் தேவையையும் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.