வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (09/10/2018)

கடைசி தொடர்பு:10:50 (09/10/2018)

தூத்துக்குடி செல்லும் ஆளுநர் - புகார் மனு அளிக்க அழைப்பு விடுக்கும் ஆட்சியர்

”தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், வரும் 12-ம் தேதி தூத்துக்குடி வருகிறார். அன்று, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு கோரிக்கை மனுக்களைப் பெறுவார்” என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

tamilnadu governor

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தூய்மை இந்தியா திட்டப்பணிகள்குறித்து ஆய்வுசெய்வதுடன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுவருகிறார். இதற்கு தி.மு.க., ம.தி.மு.க,, உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் 12-ம் தேதி அவர் வருகை தர இருக்கிறார். அதற்கு முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறும் இடங்களில் முக்கியமான இடமான முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் நடைபெற உள்ள யாக பூஜைகளில் ஆளுநர் கலந்துகொள்வார். பின்னர்,  அவர் தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரும் 12-ம் தேதி தூத்துக்குடி வர உள்ளார். அன்று பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற உள்ளார். எனவே, ஆளுநரிடம் மனுக்களை அளிக்க விருப்பமுள்ளவர்கள், அவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க