வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (09/10/2018)

கடைசி தொடர்பு:10:42 (09/10/2018)

`ஒரு மாச வருமானம்தான் ஒரு வருஷத்துக்கு!'' - `கொலு பொம்மை' நாகலெட்சுமி

பொம்மை செய்வது எங்க குடும்பத் தொழில்லுங்க அஞ்சு தலைமுறையா பொம்மைகள் செய்யறோம். வாழ்வாதாரம் குறையக் குறைய எங்க சனங்கள் வேற வேற தொழிலைப் பார்த்துப் போயிருச்சு.-

`ஒரு மாச வருமானம்தான் ஒரு வருஷத்துக்கு!'' - `கொலு பொம்மை' நாகலெட்சுமி

வராத்திரி என்றதும் நினைவுக்கு வருவது, வண்ணமயமான கொலு பொம்மைகள். சுவாமி சிலைகள் முதல் குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன் பொம்மைகள் வரை எல்லாவற்றையும் ரசிப்புத்தன்மையுடன் பார்த்துப் பார்த்துச் செய்யும் பொம்மைக் கலைஞர்கள் பற்றி அறிய ஆர்வம் ஏற்பட்டது. பொம்மை கலைஞர்கள் அதிகமாக வாழும் விழுப்புரம் பகுதிக்குச் சென்றோம். வெயில் மிகுந்த காலைப்பொழுதில் சிலைகளை வடிவமைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார், நாகலெட்சுமி அக்கா.

``எங்க குடும்பத் தொழிலுங்க இது. அஞ்சு தலைமுறையா செய்யறோம். இதே கோலியனூரில் பொம்மை செய்யும் நிறைய குடும்பம் இருந்துச்சு. வாழ்வாதாரம் குறைய குறைய எங்க சனங்கள் வேற ஊருக்கு, வேற தொழிலைப் பார்த்துப் போயிருச்சு. இப்போ, இந்தக் கிராமத்தில் 20 குடும்பமும், பண்ருட்டியில் சில குடும்பமும்தான் பொம்மைகளைச் செய்யறோம். நவராத்திரி சமயத்தில் மட்டும்தான் எங்க பொம்மைகளுக்கு மவுசு ஏறும். இந்த ஒரு மாச வியாபாரத்துக்காக 11 மாசம் உழைக்கிறோம்.

ஒவ்வொரு வருஷமும் சரஸ்வதி பூஜை அன்னைக்குத்தான் தொழிலுக்குப் பூஜை போட்டு, அடுத்துவரும் வளர்பிறை நாளில் பொம்மைகள் செய்ய ஆரம்பிப்போம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாசங்களில் மழை பெய்யும். அப்போ, ஏரி, குளங்களிலிருந்து மண் எடுத்துட்டு வருவோம். ஆரம்பத்துல, இலவசமா கிடைச்சுட்டிருந்த மண்ணை, இப்போ ஒரு மாட்டுவண்டிக்கு இவ்ளோன்னு வாங்கறோம். அரசாங்கத்து மூலமா போனா இலவசமா மண்ணு கிடைக்கும். ஆனால், மாசக்கணக்கில் நடையா நடக்கணும். அவங்க ஆர்டர் தர்றதுக்குள்ள சீசனே முடிஞ்சுருமே.

வருமானம்ம்

நவம்பரில் ஆரம்பிச்சு டிசம்பருக்குள்ளே மண்ணை மிதிச்சு பக்குவப்படுத்த ஆரம்பிச்சுருவோம். மண்ணை மிதிக்க மிதிக்கத்தான் கட்டிகள் இல்லாமல் பொம்மை செய்யற பக்குவத்துக்கு வரும். அப்புறம், அச்சுகளில் செய்து, மார்ச் மாசத்துக்குள்ளே ஆயிரக்கணக்கான பொம்மைகளைச் செஞ்ச்ருவோம். வெயில் காலத்துக்குள்ளே செய்து, நிழலில் காயவெச்சாதான் பொம்மைகள் நல்லா இருக்கும். மார்ச் மாசத்துக்கு அப்புறம், கோ-ஆப்டெக்ஸ், பூம்புகார், மொத்த வியாபாரிகள் ஆர்டர் குடுப்பாங்க. ஆர்டரைப் பார்த்து, ஏற்கெனவே செஞ்சது போக, இன்னும் எத்தனை வேணும்னு கணக்குப் பார்த்து அதையும் செய்வோம். 

பொம்மைகள் எல்லாமே வெயில் படாத, ஆனால் சற்றுச் சூடான காற்று இருக்கிற இடத்தில காய்ஞ்சாதான் வெடிப்பில்லாம லட்சணமா இருக்கும். வாழுற வீட்டுக்குள்ளேதான் எங்களில் ஒண்ணாதான் அவையும் இருக்கும். அதனால், பூச்சி, பூரான் எல்லாம் வீட்டுக்குள்ளே சாதாரணமாகப் புழங்கும். புள்ள குட்டிகளோடு இருக்கும்போது கஷ்டம்தான், என்ன செய்யறது தொழிலாச்சே.

ஏப்ரல் மாசத்துக்குள்ளே பக்குவப்பட்டுரும். அப்புறம் ஒவ்வொரு செட்டா எடுத்து, ரெண்டு நாள் சூளையில் வேகவிடுவோம். மே மாசத்திலிருந்து பொம்மைகளுக்கு கலரிங் பண்ண ஆரம்பிப்போம். அக்டோபரில் ஆர்டர் கொடுத்தவங்க வந்து வாங்கிட்டுப் போயிருவாங்க. இதுக்கு நடுவுல விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் சிலைகள் செய்வோம். ஒவ்வொரு வருஷமும் இந்த அக்டோபரில் கிடைக்கும் வருமானம்தான் தாயி, அடுத்த அக்டோபர் வரை எங்களுக்குச் சாப்பாடு. வருமானம் குறைச்சலா இருந்தாலும், நாங்க செய்யற பொம்மைகளை கடவுளாப் பார்த்துக் கும்பிடறாங்க. அந்த சந்தோஷத்துக்காகத் தொடர்ந்து செய்துட்டிருக்கோம்.

எங்ககிட்ட 100 ரூபாய்களில் வாங்கிட்டுப்போகும் பொம்மைகளை, கடைகளில் ஆயிரங்களில் விற்பாங்க. எங்க .உழைப்புக்கு ஏத்த கூலியும் இல்லாமல், வேற பிழைப்பும் தெரியாமல் அடுத்த தலைமுறையும் பொம்மையைச் செய்ய ஆரம்பிச்சுட்டோம். நாங்க செய்யற பொம்மைகள்தான் வாய் நிறைய சிரிக்குது கண்ணு. எங்க வாழ்க்கையில் சிரிப்பு கம்மிதான். சுவாமி சிலைகளுக்குக் கண்ணுத் திறக்கணும்'' என்றபடி வேலையில் மூழ்குகிறார்.

சாமிகளுக்குத் கண்களைத் திறக்கும் இவர்களின் வாழ்க்கைக் கதவைத் திறப்பது யார்?

 


டிரெண்டிங் @ விகடன்