வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (09/10/2018)

கடைசி தொடர்பு:11:55 (09/10/2018)

`யார் யாரோ மிரட்டுறாங்க!' - பாதிக்கப்பட்ட பட்டியல் இன இளைஞர் குமுறல்

கரூர் மாவட்டத்தில், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் முன்பு இருசக்கர வாகனத்தில் இறங்காமல் சென்றார் என்பதற்காக, பட்டியல் இன இளைஞர் ஒருவரைக் கீழே தள்ளி படுகாயப்படுத்திவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  

பாதிக்கப்பட்ட பட்டியல் இன இளைஞர் குமுறல்

 

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள நல்லிப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த இவர், டெய்லர் வேலை செய்துவருகிறார். இவர், தனது மகளுக்கு மாத்திரை வாங்கி வர, க.பரமத்தியில் உள்ள மருந்துக் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். இவரை மோளபாளையத்தைச் சேர்ந்த செல்வக்கண்ணன் தாக்கியுள்ளார். சம்பவம் குறித்து  ராஜேந்திரன் கூறுகையில், "நான் செல்லும் வழியில் மோளபாளையத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வக்கண்ணன், குடிபோதையில் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த வழியாகப் போன என்னையும் மறிச்சு, தகராறில் ஈடுபட முயன்றார்.  நான் வேகமாக வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டேன். ஆத்திரமடைந்த செல்வக்கண்ணன், 'சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதோடு, வண்டியை விட்டு இறங்கி, தள்ளிகிட்டுப் போகச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டினார். நான் அதைப் பொருட்படுத்தாம மருந்துக்கடையில் மாத்திரை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.

ஆனா, பின்தொடர்ந்து வந்த செல்வக்கண்ணன், தனது இருசக்கர வாகனத்தில் இருந்தபடி என்னை எட்டி உதைத்தார். இதனால் நிலை தடுமாறிக் கீழே விழுந்துட்டேன். அதன்பின்னரும் ஆத்திரம் தீராத செல்வக்கண்ணன், என்னைத் தரதரவென்று இழுத்துச்சென்றார். இதில் நான் படுகாயமடைந்தேன். பின்னர், என்னைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். அவ்வழியே வந்தவர்கள் என்னை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சை அளிக்க கரூர்  மருத்துவமனைக்கு அனுப்பி வச்சாங்க. மருத்துவமனையில் சிகிச்சையின்போது பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், க.பரமத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செஞ்சாங்க. ஆனா, செல்வக்கண்ணனை இன்னும் கைது பண்ணலை. செல்வக்கண்ணனுக்கு சார்பா காவல் துறை நடந்துக்குது. 'வழக்கை வாபஸ் வாங்கலைன்னா, குடும்பத்தோட குளோஸ் பண்ணிடுவோம்'னு யார் யாரோ மிரட்டுறாங்க. விடுதலை சிறுத்தைகள் கட்சி எனக்கு பக்கபலமா இருக்கிறதனாலதான் நான் இன்னும் உசுரோட இருக்கேன். எனக்கு ஏதும் ஆனுச்சுன்னா, அதுக்குக் காரணம் செல்வக்கண்ணன்தான்" என்றார் வேதனையுடன்.
 
செல்வக்கண்ணன் தரப்பில் பேசினால், "ராஜேந்திரனே பைக்கில் இருந்து தானா விழுந்துட்டு, பழியைத் தூக்கி செல்வக்கண்ணன் மேல போடுறார். அவர்தான் பி.சி.ஆர் வழக்கை வைத்து எங்களை மிரட்டிவருகிறார். செல்வக்கண்ணன் இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பார்" என்றார்கள்.  க.பரமத்தி காவல் நிலையத்திலோ, "வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடிவருகிறோம். 'செல்வக்கண்ணனுக்கு காவல் துறை இனக்கமாக இருக்குது'னு சொல்றது வீண் பழி" என்றார்கள்.