வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (09/10/2018)

கடைசி தொடர்பு:11:28 (09/10/2018)

"எனக்கு செய்த துரோகம்தான் சண்முகப்ரியாவைப் புலம்ப வெச்சிருக்கு"- முத்துலட்சுமி வீரப்பன்

முத்துலட்சுமி வீரப்பன்

'சந்தன மர' வீரப்பனைப் பிடிக்க, காவல் துறைக்குத் தான் உதவியதற்கு அரசு அறிவித்திருந்த சன்மானம் 14 ஆண்டுகளாகியும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சமீபத்தில் தெரிவித்திருந்தார், கோவையைச் சேர்ந்த சண்முகப்ரியா. இவர், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி, வீரப்பன் குறித்த தகவல்களைச் சேகரித்துத் தந்தவர் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம் பேசினோம்.

முத்துலட்சுமி

"சில செய்திகளை அப்பவே சொல்லியிருக்கேனே. சண்முகப்ரியா மூலமாக என் கணவரைப் பிடிக்கத் திட்டம் போட்டாங்க. ஆனா, அதில் அவங்களுக்கு வெற்றி கிடைக்கலை. என்னை கோயம்புத்தூர்ல ஒரு வீட்டுல போலீஸ் இருக்கச் சொன்னப்போ, சண்முகப்ரியாவின் வீடுதான்னு சொல்லியிருந்தாங்க. அவங்க கீழேயும், நான் மாடியிலும் இருந்தோம். பிறகுதான் தெரிஞ்சது, கொஞ்ச நாள் சண்முகப்ரியா முன்புதான் அவங்களைக் குடிவெச்சிருந்தாங்கன்னு. என்னோடு நல்லாப் பழகினாங்க. அவங்க குடும்பப் பிரச்னைகளை எல்லாம் சொன்னாங்க. அதுக்காக, ஒருசில தடவை அவங்களோடு உதவிக்குப் போயிருக்கேன். சென்னையில் படிச்சுட்டிருந்த என் பொண்ணை, ஏதேதோ காரணம் சொல்லி கோயம்புத்தூருக்கு வரவெச்சாங்க. ஸ்கூல்ல சேர்க்கும்போது, கார்டியனா அவங்க பேரை போடணும்னு சொன்னப்போதான் அவங்க திட்டமே புரிஞ்சது.

அங்கிருந்து வெளியேறிடலாம்னு நினைச்சப்போ, வீட்டுக்குள்ளே அடச்சிவெச்சு, 'உனக்காக  50,000 ரூபா செலவு பண்ணியிருக்கோம். அதைத் திருப்பிக் கொடுங்க'னு டார்ச்சர் பண்ணாங்க. நகைகளைக் கொடுத்த பிறகுதான் வரமுடிஞ்சது. இன்னிக்கு, அவங்க பேசறது பற்றி என்ன சொல்றது. அரசு வாக்குறுதி கொடுத்திருக்குமான்னு தெரியலை. காவல் துறையைச் சேர்ந்தவங்க யாராவது சொல்லியிருக்கலாம். சொன்னதை சில போலீஸ் செய்வாங்க; சிலர் செய்ய மாட்டாங்க. என்னைப் பொறுத்தவரை, எனக்குச் செஞ்ச துரோகம்தான் இப்படிப் புலம்ப வெச்சிருக்கு. இதுமட்டுமில்லே, இன்னும் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பாங்க" என்று ஆதங்கத்துடன் முடித்தார் முத்துலட்சுமி.