வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (09/10/2018)

கடைசி தொடர்பு:12:10 (09/10/2018)

''குடிக்கத் தண்ணீர் கிடைக்கல" - கோவாவிலிருந்து குமரி மீனவர்கள் வாட்ஸ்அப்பில் குமுறல்!

ரெட் அலர்ட் விடப்பட்டதால், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவா மாநிலத்தில் கரை ஒதுங்கிய குமரி மாவட்ட மீனவர்கள், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவித்துவருகின்றனர்.

குமரி மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 130 மீனவர்கள், கொச்சி துறைமுகத்தில் இருந்து 15 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். மகாராஷ்டிரா, கோவா மாநில கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்குக் கடந்த 7-ம் தேதி ரெட் அலர்ட் விடப்பட்டது. இதையடுத்து, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், உடனடியாக அருகில் உள்ள கரைப்பகுதிகளுக்குத் திரும்பும்படி கடற்படை, விமானப்படைகள் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டனர். கொச்சி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 130 மீனவர்களும், கோவா மாநிலம் கோஸ்டாலியா துறைமுகத்தில் தஞ்சம் புகுந்தனர். அங்கு, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

மீனவப் பிரதிநிதிகள், இதுகுறித்து கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாவிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும், கோஸ்டாலியா துறைமுகத்தில் போதிய வசதி இல்லாததால், அருகில் உள்ள வாகோடா துறைமுகத்துக்குச் செல்லுங்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.  ஆனால், வாகோடா துறைமுகத்துக்குள் நுழைய மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நாட்டுப் படகில் கரைக்குச் சென்ற மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலகத்தில் சென்று முறையிட்டுள்ளனர். அதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள், தண்ணீர் வேண்டுமானால் அதற்கான பணம் செலுத்துங்கள் எனக் கூறியிருக்கிறார். கடலில் இருந்து வருவதால், கையில் பணம் இல்லை எனவும், விசைப்படகில் இருக்கும் மீன்களை கரையில் இறக்க அனுமதித்தால், அதை விற்று பணம் தருகிறோம் எனவும் மீனவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், மீனை துறைமுகத்தில் இறக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், மீனவர்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவித்துவருகிறார்கள். இதுகுறித்து அவர்கள்,வாட்ஸ்அப் வீடியோ எடுத்து குமரி மாவட்ட மீனவப் பிரதிநிதிகளுக்கு அனுப்பியுள்ளனர். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில், குமரி கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்குக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.