வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (09/10/2018)

கடைசி தொடர்பு:15:40 (09/10/2018)

நக்கீரன் கோபாலைச் சந்திக்க அனுமதி மறுப்பு... போலீஸுடன் வாக்குவாதம்... வைகோ கைது!

நக்கீரன் கோபாலைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் காவல் துணை ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

வைகோ

 

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டார். தமிழக ஆளுநரின் துணைச் செயலர், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிந்தாதரிப்பேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நக்கீரன் கோபாலைச் சந்திப்பதற்காக சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை புரிந்தார். துணை ஆணையர் அலுவலகத்துக்குள் வைகோவை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. காவல்துறையினருக்கும் வைகோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ``நீதியரசர்களையும், காவலர்களையும் அவதூறாகப் பேசிய பாஜக தேசியச் செயலாளரை,  ஆளுநர் மாளிகைக்கு அழைத்து தேநீர் விருந்து வைத்து அனுப்புகின்றனர். ஒரு பத்திரிகை ஆசிரியரை மிரட்டும் விதமாக இப்படிக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கெல்லாம் அவர் பயந்தவர் இல்லை. அவர் ஏற்கெனவே 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் விதத்தில் ஒரு நெருக்கடி காலத்தைப் போல ஆளுநர் உத்தரவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நான் ஒரு வழக்கறிஞராக இங்கு வந்துள்ளேன். என்னைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றால் காவல்துறை மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர் சட்டத்தில் இடம் உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 124 தேசத்துரோக வழக்கு சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. யார் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான தேச பக்தர் எனத் தெரிந்துகொள்ளுங்கள்.” என்றார்.

நக்கீரன் கோபாலைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வைகோ தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.