வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (09/10/2018)

கடைசி தொடர்பு:13:15 (09/10/2018)

` 93-ல் வாங்கிய சிலைக்கு 2008-ம் ஆண்டு ஆவணம்!' - ரன்வீர் ஷா தரப்பிடம் நீதியரசர்கள் காட்டம்

'சிலைகள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல்செய்ய வேண்டும்' என ரன்வீர் ஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்றம்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபரும் நடிகருமான ரன்வீர் ஷா வீட்டில் இருந்து கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் மற்றும் கல் தூண்களைக் கடந்த மதம் 27-ம் தேதி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல்செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரது நண்பர் கிரண்ராவ் வீட்டில் நடந்த சோதனையிலும் பல சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, இவர்கள் இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

` நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, எங்களுக்கும் சிலை கடத்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிலைகள் அனைத்தையும் பணம் கொடுத்து முறையான ஆவணங்களோடுதான் வாங்கினோம். எனவே, இதில் எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் ரன்வீர் ஷா. இந்த வழக்கு, இன்று சிறப்பு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ரன்வீர் ஷா தரப்பு வழக்கறிஞர், ‘ கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறை மற்றும் கர்நாடக அரசின் அனுமதிபெற்று, 1993-ம் ஆண்டு பணம் கொடுத்து வாங்கப்பட்டவை. பின்னர், இதற்கான ஆவணங்கள் 2008-ல் பெறப்பட்டுவிட்டது’ என வாதாடினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘1993-ம் ஆண்டு வாங்கிய சிலைக்கு, 2008-ல் தான் ஆவணம் வாங்குவீர்களா... இதுதான் சட்ட நடைமுறையா’ எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், கைப்பற்றப்பட்ட சிலைகள் தொடர்பான ஆவணங்களை அட்டவணைப்படி ரன்வீர் ஷாவும் கிரண் ராவும் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.