வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (09/10/2018)

கடைசி தொடர்பு:13:07 (09/10/2018)

`உங்களைப் பார்க்க பரிதாபமா இருக்கு'- இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது ஆடியோ புகாரை வெளியிட்ட ஸ்ரீஜா

இன்ஸ்பெக்டர் தாம்சன்

சென்னையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது, அவரின் இரண்டாவது மனைவி என்று சொல்லும் ஸ்ரீஜா, ஆடியோ வழியாக பரபரப்பான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதற்கு தாம்சனும் மறுப்பு தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகர காவல் துறையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுபவர் தாம்சன். இவர், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர். தாம்பரம், இரும்பூலியூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினீயர் முத்தையா என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் செக்கை மிரட்டி வாங்கியதாக, இன்ஸ்பெக்டர் தாம்சன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தித் தொடர்பாளர் பாண்டியன், அவரின் மனைவி சஜினி ஆகியோர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் பீர்க்கன்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 தாம்சனின் இரண்டாவது மனைவி ஸ்ரீஜா என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின்பேரில், அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் விசாரணை நடத்திவருகிறார். இந்தச் சூழ்நிலையில், இன்ஸ்பெக்டர் தாம்சன் குறித்து ஸ்ரீஜா பரபரப்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், ``கடந்த 2006-ம் ஆண்டில் செல்லம் என்று என்னை அழைத்து ஏமாற்றினீர்கள்.  எவ்வளோ நல்ல பிள்ளையாக நடித்தீர்கள்.  நமக்கு திருமணம் நடப்பதற்கு முன்பே என்னை உங்கள் மனைவி என்று கூறினீர்கள். இதையெல்லாம் கடவுளுக்கும் உங்களுக்கும் தெரியும். உங்களை முழுமையாக நம்பினேன். நான் கர்ப்பமாக இருக்கும்போது வேளாங்கண்ணி மாதா முன், நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று தொட்டில், சிலைகளைக் கொடுத்தீர்கள். ஆனால், என்னையும் பொண்ணையும் நடுரோட்டில் விட்டுவிட்டீர்கள். இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால்கூட இப்படியொரு மகள் கிடைக்குமா என இரண்டு ஆண்டுகள் என்னிடம் நடித்தீர்கள். 

65 நாள் கர்ப்பமாக நான் இருந்தபோது, என்னை ஹோட்டலில் தங்க வைத்திருந்தீர்கள். அப்போது என்னிடம் பணம் பறிக்க, பிளாட் வாங்கலாம் என்று கூறினீர்கள். உங்களுடைய முதல் மகளை நான் சந்தித்தபோது, நீங்கள் என்னிடம் என்ன சொன்னீர்கள்? அது எல்லாம் உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். தற்போது அவள் உயிரோடு இல்லை. உங்களை நான் கண்காணிக்கத் தொடங்கியதும் என்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினீர்கள். 2003-ம் ஆண்டு, ஜெயிலுக்குச் சென்ற தகவல் எனக்குத் தெரிந்திருந்தால், உங்கள் முகத்தில்கூட விழித்திருக்க மாட்டேன். உங்களிடம் பழகிய பெண்கள்குறித்த முழுத் தகவலும் எனக்குத் தெரியும். நான் காரோடு வந்தபோது, உங்களுக்கு கார் மீது ஆசை ஏற்பட்டது. நான் நகையோடு வந்தபோது, அதன்மீது ஆசை வந்தது. இந்த முறை உங்களை ஜெயிலில் போட வைக்கிறேன். எனக்கு சொத்து இருப்பதை நீங்கள் கணக்கு போட வேண்டாம். உங்களை நம்பி ஏமாந்துவிட்டேன். உங்களைப் பார்த்து பொறாமை வரவில்லை. பரிதாபமாக இருக்கிறது. லண்டனில் சைக்காலஜி படித்த என்னை ஏமாற்றிவிட்டீர்கள். என் பொண்ணுக்கு நீங்கள்தான் அப்பா.  நீங்கள் ஒரு கார்டு கோர் கிரிமினல்" என்பதோடு அந்த ஆடியோ முடிகிறது. 

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தாம்சனிடம் கேட்டோம். ``முத்தையா, அவரின் மகன் எட்வின் மற்றும் தாம்பரம் பாண்டியன், அவரின் மனைவி சஜினி ஆகியோர் என்னுடைய குடும்ப நண்பர்கள். முத்தையாவின் உறவினர்தான் சஜினி. அவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. சம்பவத்தன்று எட்வின் வீட்டுக்கு நான் சென்றபோது, சஜினி அங்கு இருந்தார். அன்றைய தினம்கூட முத்தையா எனக்கு உணவளித்தார். செக்கை ரத்துசெய்ய வேண்டும் என்று கருதிய எட்வின், முத்தையா மூலம் புகார் கொடுக்கவைத்து என் மீதும் பாண்டியன், சஜினி மீதும் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்ய வைத்துள்ளார். 

 ஸ்ரீஜா என்பவர் என்னுடைய மனைவி என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவருக்கும் எனக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவித தொடர்பும் கிடையாது. நான், ஸ்ரீஜாவை திருமணம் செய்யவில்லை. ஆனால், அவருக்கும் எனக்கும் பெண் குழந்தை பிறந்தது உண்மைதான். என்னை கார்டு கோடு கிரிமினல் என்று ஸ்ரீஜா சொல்வதால் நான் அப்படிப்பட்டவனாகிவிட மாட்டேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். மேலும், ஸ்ரீஜா இதுவரை மூன்று கமிஷனர்களைச் சந்தித்து என்மீது புகார் கொடுத்துவிட்டார். அந்தப் பிரச்னையை சட்டரீதியாக நான் சந்தித்துவருகிறேன். என்னை அவமானப்படுத்தத்தான் ஸ்ரீஜா மீண்டும் மீண்டும் புகார் கொடுத்துவருகிறார். ஏற்கெனவே ஸ்ரீஜாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. அந்தத் திருமணத்துக்கு அவர் விவாகரத்து பெறவில்லை. அப்படியிருக்கும்போது, நான் அவரை எப்படி திருமணம் செய்திருக்கமுடியும். 

நான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். சட்டம் எனக்கு நன்றாகத் தெரியும்போது, ஒரு வீட்டுக்குள் புகுந்து 10 லட்சம் ரூபாய் செக்கை மிரட்டி வாங்குவேனா. ஆனால், என்மீது செக்கை மிரட்டி வாங்கியதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என்மீது தவறு இருந்தால், போலீஸார் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னைப் பற்றி காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும்.என்னைப் பற்றி வரும் தவறான தகவல்களால் மனவேதனையில் இருக்கிறேன்" என்றார்.