ஒருபக்கம் தடை... மறுபக்கம் ஆய்வு... மணல் குவாரிக்கு எதிராகப் பொங்கும் நீர் ஆதாரப் பாதுகாப்புக் குழு | Water Reserve Protection Committee against sand quarries

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (09/10/2018)

கடைசி தொடர்பு:14:05 (09/10/2018)

ஒருபக்கம் தடை... மறுபக்கம் ஆய்வு... மணல் குவாரிக்கு எதிராகப் பொங்கும் நீர் ஆதாரப் பாதுகாப்புக் குழு

கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைக்க பொதுப்பணித்துறை ஆய்வு செய்துவருகின்றனர். ``இப்பகுதியில் குவாரி அமைத்தால் நாங்கள் யார் என்று காட்டுவோம்" எனக் கொள்ளிட நீர் ஆதாரப் பாதுகாப்புக் குழுவினர் எச்சரித்துள்ளனர். இதனால் திருமானூர் பகுதிகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மணல்

அரியலூர் மாவட்டம், திருமானுர் கொள்ளிடம் ஆற்றில் பொதுப்பணித்துறை செயல்படுத்தும் மணல் குவாரியானது, விதிமுறைகளைப் பின்பற்றாமல் உயர்நீதிமன்றத்துக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்துச் செயல்பட்டு வந்தது. இதைக் கிராம மக்களும், விவசாயிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்தனர்.                               

இதையடுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலெட்சுமி தலைமையில் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, கொள்ளிட நீர் ஆதாரப் பாதுகாப்புக் குழு சார்பாக தலைவர் தனபால், கரும்பு விவசாயச் சங்கத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ``பொதுப்பணித்துறையினர் விதிமுறைகளை மீறி மணல்குவாரி அமைத்துள்ளனர்" என்று அதற்கான ஆதாரங்களைக் காட்டினர். அதைப் பார்த்ததும் கொள்ளிட ஆற்றில் மணல்குவாரி அமைப்பதற்குத் தற்காலிகத் தடைவிதித்தார் கலெக்டர். மேலும், வல்லுநர் குழு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.

கொள்ளிடம் ஆற்றில் அல்லப்படும் மணல்

இந்தநிலையில் பொதுப்பணித்துறையினர் மணல் குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ``பணத்துக்காக இயற்கையை அழிக்க நினைக்கும் சில கயவர்களுக்குத் துணைபோவது வேதனையாக இருக்கிறது. மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மணல் குவாரியை எதிர்கால நலன்கருதி தடை செய்ய வேண்டும். இல்லையேல் நாங்கள் யார் என்று தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும்" என்று கொள்ளிட நீர் ஆதாரப் பாதுகாப்புக்குழுவினர் எச்சரித்தனர்.