வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (09/10/2018)

கடைசி தொடர்பு:14:40 (09/10/2018)

`முதல்வர் வீட்டை முற்றுகையிடப் போறோம்!’ - தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்கள் ஆவேசம்

தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்தபடி, மழைக்கால நிவாரணம் வழங்காத அ.தி.மு.க. அரசைக் கண்டித்து, உப்பளத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்கள்

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் அதிகம் உப்பு உற்பத்தி நடக்கிறது. இங்கு 25,000 ஏக்கர் பரப்பளவில்  நடைபெற்று வரும் உப்பு உற்பத்தியில், 50,000 ஆண், பெண் உப்பளத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பொதுவாக தமிழகத்தில் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான 8 மாதங்கள் உப்பு உற்பத்தி நடைபெறும் காலங்கள். மழைக்காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் உப்பு உற்பத்தி நடைபெறுவதில்லை.

இந்தக் காலங்களில், உப்பளத் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பு இல்லாமலும் வருமானம் இல்லாமலும் இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, உப்பளத் தொழிலாளர்களுக்கு, மழைக்கால நிவாரண நிதியாக, ரூ.5,000 வழங்கப்படும் எனத் தற்போதைய அதிமுக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் இதுவரையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்தும் அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி உப்பளத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் பேசிய உப்பளத் தொழிலாளர்கள், ``கடந்த தேர்தலின் போது, அதிமுக அரசு, உப்பளத் தொழிலாளர்களுக்கு, மழைக்கால நிவாரணம் வழக்கப்படும் எனத் தேர்தல் அறிவிப்பில் அறிவித்திருந்தது. ஆனால், தற்போதுவரை வழங்கப்படவில்லை. உப்பளத் தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு நிலங்களை நேரடியாக குத்தகைக்கு விட்டு அவர்களுக்கு நிலம் சார் உரிமைகள் நிலை நிறுத்தப்பட வேண்டும். தொழிலாளர்கள் காப்பீடுச் சட்டத்தில் உப்பளத் தொழிலாளர்களையும் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவிட்டால், தமிழகத்தின் உப்பளத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, முதல்வர் வீட்டை முற்றுகையிட்டுப் போராடட்டம் நடத்துவோம்” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க