வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (09/10/2018)

கடைசி தொடர்பு:15:45 (09/10/2018)

`உலக அஞ்சல் வாரவிழா' - உறவினர்களுக்குக் கடிதம் அனுப்பிய மாணவர்கள்

``உலக அஞ்சல் வார”விழாவை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பினை வலியுறுத்தி கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன், உறவினர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினர். 
 

ஒவ்வோர் ஆண்டும் உலகமெங்கும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ``உலக அஞ்சல் வார விழா” கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி இன்ராக்ட் கிளப் சார்பில் உலக அஞ்சலக வாரவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பினை வலியுறுத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் கடிதம் எழுதினர்.

தொடர்ந்து, ``வடகிழக்குப் பருவமழை நீரை முறையாகச் சேமித்து வைக்க வேண்டும். ஆளுக்கு ஒரு மரம் நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். வாரம் ஒருமுறை கடிதம் அனுப்பும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு, உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தபால் தலை சேமிப்பினை தொடர வேண்டும். சேமிப்பு பழக்க வழக்கம், குடிநீர் சிக்கனம் ஆகியவை குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் விழிப்பு உணர்வினை ஏற்படுத்துவேன்.” என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து மாணவ மாணவிகள் கூறுகையில், ``விடுதியில் தங்கி பள்ளியில் படித்துக்கொண்டே வீட்டில் உள்ள அன்புள்ள அப்பாவுக்கு... அம்மாவுக்கு... எனக் கடிதம் எழுதிய காலமெல்லாம் மறைந்து போனது. கடிதம் எழுதும் பழக்கத்தால் எழுத்து, சிந்தனை, தகவல் தொடர்பு, பொது அறிவு, பிறரை மதிக்கும் நல்ல பண்பு, நட்பினை வளர்த்தல் ஆகிய பண்புகள் வளரும். வழக்கத்தில் இருந்த கடிதம் எழுதும் பழக்கம் தற்போது மாணவர்கள் மத்தியில் கடிதம் எழுதும் போட்டி எனப் போட்டி வடிவில் மட்டுமே உள்ளது. ஆனால், எங்கள் பள்ளியில் கடிதம் எழுதுவது போட்டியாக இல்லாமல், உறவினர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான செயலை வலியுறுத்திக் கடிதம் அனுப்பியுள்ளோம்.

அதாவது, தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது. பெய்யும் மழைநீர் நமக்கான குடிநீர், விவசாயத்துக்கான உயிர் நீர் என்பதனை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நீரை முறையாகச் சேமிக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்களில் ஒருவரின் முகவரிக்கு அஞ்சல் அட்டையில் விழிப்புஉணர்வு வாசகத்துடன் எழுதி அனுப்பியிருக்கிறோம்.” என்றனர். இதைத் தொடர்ந்து, பள்ளியிலிருந்து எட்டயபுரம் ரோடு வழியாகப் பேரணியாகச் சென்று கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள தபால்பெட்டியில்  அஞ்சல் அட்டைகளை அனுப்பினர். பேரணியின் போது, ``மழைநீரைச் சேமிப்போம், சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்போம்” என மாணவ மாணவிகள் விழிப்பு உணர்வு கோஷம் எழுப்பினர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க