வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (09/10/2018)

கடைசி தொடர்பு:16:20 (09/10/2018)

பைக்கில் 27 தோட்டாக்கள்! - துப்பாக்கியுடன் மாயமான ரவுடி யமஹா சீனிவாசன் 

யமஹா சீனிவாசனின் பைக்கிலிருந்த துப்பாக்கி தோட்டாக்கள்

சென்னையில் பிரபல ரவுடி யமஹா சீனிவாசனின் பைக்கிலிருந்து 27 துப்பாக்கித் தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவரையும் துப்பாக்கியையும் போலீஸார் தேடிவருகின்றனர். 

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் யமஹா சீனிவாசன். இவரை ‘பி’ பிரிவு ரவுடிகள் பட்டியலில் போலீஸார் வைத்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இந்தநிலையில் யமஹா சீனிவாசனை கைது செய்ய நேற்றிரவு போலீஸார் அவரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லை. அவர் பயன்படுத்தும் பைக் வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது. உடனடியாகப் போலீஸார் அந்தப் பைக்கை சோதனை நடத்தினர். அதில் 27 தோட்டாக்கள் இருந்தன. அதைப் பறிமுதல் செய்த போலீஸார் துப்பாக்கித் தோட்டாக்கள் எப்படி யமஹா சீனிவாசனுக்குக் கிடைத்தது என்று விசாரித்து வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரை மும்பையில் போலீஸார் பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் யமஹா சீனிவாசனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவரின் வீட்டுக்குச் சென்றபோது அவர் இல்லை. ஆனால், அவரின் பைக்கில் 27 துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது எங்களின் சோதனையில் தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்ததோடு துப்பாக்கியோடு மாயமாகியுள்ள யமஹா சீனிவாசனை தேடிவருகிறோம்" என்றனர்.