வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (09/10/2018)

கடைசி தொடர்பு:16:45 (09/10/2018)

சபரிமலை வழக்கை அவசர வழக்காக எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சபரிமலை

 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபட, உச்சநீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பு பரபரப்பான விமர்சனத்துள்ளானது. ஒரு பிரிவினரிடையே வரவேற்பை பெற்றாலும் நாடு முழுவதும் பரவலாக இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா விஜயன், உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை நேற்று தாக்கல் செய்தார். 

அதில், ``பல ஆண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு சிதைத்து விட்டது. பக்தர்களின் தரப்பை விசாரிக்காமலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அனுமதி வழங்கப்பட்டது. அதுபோலவே சபரிமலை வழக்கிலும் பக்தர்களின் உணர்வுக்கும் பாரம்பர்ய பழக்க வழக்கத்துக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்தனர். மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதோடு, இந்த வழக்கு பட்டியலிட்ட பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறிவிட்டது. இதனால், வரிசைப்படி மறுஆய்வு மனுக்கள் பட்டியலிட்ட பின்னரே விசாரணைக்கு இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க