வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:17:00 (09/10/2018)

`ஆளுநர் பேசியது இதுதான்!' - ராஜ்பவன் விளக்கம்

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாகத் தகவல் வெளியான நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்


சென்னையில் பாரதிய சிக்‌ஷான் மண்டல் என்ற அமைப்பு சார்பில் கடந்த 6-ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரளுவதாக ஆளுநர் பேசியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆளுநர் பேசிய விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
இதில், ``ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், `தமிழகத்தில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் கைமாறுவதாக கல்வியாளர்கள் சிலர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர். அந்தத் தகவலை என்னால் நம்ப முடியவில்லை. இதனால், துணைவேந்தர் பணிநியமன நடைமுறையில் மாற்றம் கொண்டுவர நான் நினைத்தேன். இதுவரை 9 துணைவேந்தர் முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்’. இதுவே அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியது. 
இதன்மூலம் ஆளுநர் யார் மீதும் ஊழல் புகாரோ, பணம் கைமாறியதாகக் குற்றச்சாட்டோ வைக்கவில்லை. கல்வியாளர்கள் சிலருடன் கலந்துரையாடுகையில் அவர்கள் கூறிய தகவலை மட்டுமே ஆளுநர் சொல்லியிருக்கிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆளுநர் மாளிகை விளக்கம்

மேலும், ``துணைவேந்தர்கள் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், விதிகளின்படியுமே நடைபெற்றுள்ளது. இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ள 9 துணைவேந்தர்களும், அவர்களின் தகுதி, திறமை அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.