வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (09/10/2018)

கடைசி தொடர்பு:17:20 (09/10/2018)

சேலம் அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் 9 பேர் இடமாற்றத்துக்குத் தடை!

சேலம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள்

சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் பேராசியர்களுக்குத் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றுப்பணி கொடுக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கைக் கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மாணவர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பேராசியர்களுக்கு மாற்றுப்பணி கொடுக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்தத் தகவலை `பேராசியர்களை வேறு கல்லூரிகளுக்குத் தற்காலிகமாக மாற்றுவதா?' - கொதிக்கும் சேலம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள்' என்ற தலைப்பில் விகடன் ஆன் லைனில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாகக் கல்லூரி பேராசிரியர்கள் மாற்றுப் பணி அனுப்புவது ரத்து செய்யப்பட்டு இதே கல்லூரியில் தொடர்ந்து பணி புரிய உயர் கல்வித்துறையிலிருந்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து நமக்குப் போன் பேசிய சேலம் கலைக்கல்லூரி மாணவர்கள், `கல்லூரியில் உள்ள பெரும்பாலான துறைகளில் நியாயமாகவும் மனசாட்சிபடியும் பணியாற்றுகின்ற பேராசிரியர்களைத் திட்டமிட்டே கல்லூரி நிர்வாகம் வேறு இடங்களுக்கு மாற்றுப்பணி கொடுத்து அனுப்பினார்கள். மாற்றப்பட்ட 9 பேராசிரியர்களுமே மாணவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியவர்கள். உண்மையில் இவர்கள் மாற்றப்பட்டிருந்தால் எங்களுடைய படிப்பு பாதிக்கப்படும். என்பதால்தான் மாணவர்கள் நாங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தோம்.

இதை விகடன் ஆன் லைன் மூலம் வெளியிட்டு இருந்தீர்கள். அதையடுத்து இன்று பேராசிரியர்கள் தற்காலிகமாக வேறு கல்லூரிகளுக்கு வேறு பணிக்கு மாற்றப்பட்டிருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்  நலன்களில் அக்கறை கொண்டு செய்தி வெளியிட்டு எங்களின் நியாயமான கோரிக்கைக்கு துணை நின்ற விகடனுக்கு நன்றி'' என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க